அக்னியாய் நிற்கும் அண்ணாமலை

திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும். நெருப்பை மையப்படுத்தும் அக்னி தலமாக போற்றப்படுகிறது திருவண்ணாமலை.

Update: 2022-11-22 12:25 GMT

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும், இந்த உலகத்தை கட்டுப்படுத்தும் பஞ்ச பூதங்களாக பார்க்கப்படுகின்றன. பஞ்ச பூதங் களையும் வெளிப்படுத்தும் வகையில் சிவபெரு மானுக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. இதில் நெருப்பை மையப்படுத்தும் அக்னி தலமாக போற்றப்படுகிறது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணா மலையார் திருக்கோவில். இத்தல இறைவனை அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர் என்றும், அம்பாளை உண்ணாமுலையம்மன், அபிதகுஜாம்பாள் என்றும் அழைப்பார்கள்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, தில்லையை தரிசித்தால் முக்தி, திருமறைக்காட்டில் தீர்த்தமாடினால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி கிடைக்கும். அடி முடி காண முடியாதவர் சிவபெருமான் என்பார்கள். அதனை சிவபெருமான் மெய்ப்பித்து காட்டிய இடம், திருவண்ணாமலை.

ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'யார் பெரியவர்?' என்ற வாதம் எழுந்தது. இருவரும் ஒரு முடிவுக்கு வர இயலாமல், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது சிவபெருமான் "என்னுடைய முடியையும், அடியையும் யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவர்களே பெரியவர்" என்று பதிலளித்தார். பின்னர் விண்ணுக்கும் மண்ணுக்குமாக மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக மாறி நின்றார். இதையடுத்து அன்னப் பறவை வடிவம் கொண்டு, சிவபெருமானின் முடியைக் காண பிரம்மதேவனும், வராக (பன்றி) வடிவம் எடுத்து ஈசனின் அடியைக் காண திருமாலும் புறப்பட்டனர். ஆனால் பல கோடி ஆண்டுகள் ஆகியும் அவர்களால் ஈசனின் அடியையும், முடியையும் காண முடியவில்லை.

ஒரு கட்டத்தில் பிரம்மாவும், திருமாலும் திரும்பிவந்தனர். அதில் திருமால், தன்னால் அடியைக் காண இயலவில்லை என்பதை ஈசனிடம் தெரிவித்தார். ஆனால் பிரம்மனோ, தான் ஈசனின் முடியைக் கண்டு விட்டதாக பொய் கூறியதுடன், அதற்கு சாட்சியாக சிவனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூ ஒன்றையும் எடுத்து வந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனுக்கும் தாழம்பூவுக்கும் சாபம் அளித்தார். இருவருக்கும் பூலோகத்தில் ஆலய வழிபாடு இருக்காது என்றார்.

சிவபெருமானின் நெருப்பு வடிவத்தை கண்ட தேவர்கள் அனைவரும், அவரை இத்தலத்திலேயே தங்கும்படி வேண்டினர். இதையடுத்து சிவபெருமான் மலையாக உருமாறினார். "இவ்வளவு பெரிய மலைக்கு எப்படி மாலையிட்டு, அபிஷேகம் செய்து வழிபடுவது" என்று அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, சிவபெருமான் சுயம்பு லிங்கமாக மலையடிவாரத்தில் தோன்றினார். அந்த சுயம்பு லிங்கத்தை மையமாக வைத்தே, தற்போதைய அண்ணாமலையார் ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

கயிலாய மலையில் சிவபெருமான் வீற்றிருப்பதால், அந்த மலைக்கு சிறப்பு. அதே நேரம் சிவபெருமானே மலையாக வீற்றிருக்கும் காரணத்தால், திருவண்ணாமலை சிறப்புக்குரியதாக இருக்கிறது. திருவண்ணாமலை நகரத்தின் புனிதமாக, இந்த மலை போற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி வலம் வருவதை 'கிரிவலம்' என்று அழைக்கிறார்கள். பழங்காலத்தில் சிவனே மலையாக உள்ள இதனை, முனிவர்களும், சித்தர்களும், ஞானிகளும் வலம் வந்து வழிபட்டிருக்கிறார்கள்.

இந்த மலை பல யுகங் களைத் தாண்டியது என்கிறார்கள். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த மலை இருப்பதாக ஆன்மிக சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும் இருந்த இந்த மலை, கலியுகமான தற்போது கல் மலையாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த மலையை ஆய்வு செய்த வரலாற்று ஆய்வாளர்கள், இந்த மலை 200 கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பதாகவும், இம்மலையில் காந்த சக்தி இருப்பதாகவும் கண்டறிந்து கூறி யிருக்கிறார்கள்.

சிவபெருமான் அக்னி ஜோதியாக தேவர்களுக்கு காட்சியளித்த நாளே, திருக்கார்த்திகை திருநாள் என்று கூறப்படுகிறது. எனவே கார்த்திகைத் தீபத் திருநாள், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும். அங்குள்ள 2668 அடி உயர சிவ மலையின் உச்சியில் தீபத் திருநாள் அன்று கார்த்திகை தீபம் ஏற்றப்படும். அது அந்த மலையைச் சுற்றியுள்ள சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்குத் தெரியும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருநாள் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

கிரிவல மகிமை

ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும், திருவண்ணாமலையில் உள்ள மலையை, சித்தர்கள் பலரும் அருவமாக வலம் வந்து வழிபடுவதாக ஐதீகம். அதனால் திருவண்ணாமலை கிரிவலம் சிறப்பு பெறுகிறது. பவுர்ணமி இரவு அன்று, அண்ணா மலையை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 14½ கிலோமீட்டர் தொலைவு கொண்ட மலையை வலம் வந்தால், சுவாமி மற்றும் அம்பாள் ஆசியுடன், சித்தர்களின் அருளையும் பெறலாம். அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை. எனவே அந்நாளில் கிரிவலம் வந்தால் கடன், வறுமை நீங்கும். புதன் கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சி பெறலாம். வியாழன்- ஞானிகளுக்கு ஒப்பான நிலைைய அடையலாம். வெள்ளி -விஷ்ணு பதம் அடையலாம். சனி- நவக்கிரகங்களை வழிபட்ட பலன் கிடைக்கும். ஞாயிறு- சிவபதவி கிடைக்கும். அமாவாசை அன்றும் மலை வலம் வரலாம். இதனால் மனக்கவலை நீங்கும். 48 நாட்கள் தொடர்ச்சியாக தினமும் அதிகாலையில் கணவனும், மனைவியும் மலை வலம் வந்தால், மகப்பேறு கிடைக்கப்பெறும்.

அர்த்தநாரீஸ்வரர்

கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அதிகாலையில் அண்ணாமலையார் சன்னிதியில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தில் இருந்து மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றுவார்கள். பின்னர் அந்த தீபங்களை ஒன்றாக்கி, அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். பரம்பொருளான சிவபெருமான் பல வடிவங்களாக இருக்கிறாா், அவரே பரம்பொருள் என்ற ஒருவராகவும் உள்ளார் என்பதே இதன் தத்துவம். பின்னர் அண்ணா மலையார் அருகில் வைக்கப்பட்ட தீபம் மலைக்கு கொண்டு செல்லப்படும். மாலையில் கோவில் கொடிமரம் அருகில் உள்ள மண்டபத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வெளியே வருவார். அவர் முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்படும். அதன் பிறகே மலை மீது மகாதீபம் ஏற்றுவார்கள். இந்த ஒருநாள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் தரிசனத்தைக் காண முடியும். மற்ற நாட்களில் அவர் சன்னிதியை விட்டு வெளியே வருவதில்லை.

கார்த்திகை தீப நிகழ்வு

24.11.2022 - துர்க்கை அம்மன் உற்சவம்

25.11.2022 - பிடாரி அம்மன் உற்சவம்

26.11.2022 - விநாயகர் உற்சவம்

27.11.2022 - கொடியேற்றம், வெள்ளி அதிகார நந்தி, அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலா.

28.11.2022 - தங்க சூரியபிரபை, வெள்ளி இந்திர விமானம்

29.11.2022 - பூத வாகனம், சிம்ம வாகனம், வெள்ளி அன்ன வாகனம்

30.11.2022 - நாக வாகனம், வெள்ளி காமதேனு, கற்பக விருட்ச வாகனம்.

1.12.2022 - கண்ணாடி ரிஷப வாகனம், வெள்ளி பெரிய ரிஷப வாகனம்.

2.12.2022 - வெள்ளி யானை வாகனம், 63 நாயன்மார் வீதி உலா, வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்.

3.12.2022 - மகா தேரோட்டம்

4.12.2022 - குதிரை வாகனம், பிட்சாடனர் உற்சவம்,

5.12.2022 - புருஷாமுனி வாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம்

6.12.2022 - அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம், தங்க ரிஷப வாகனம்

7.12.2022 - சந்திரசேகரர் தெப்ப உற்சவம்

8.12.2022 - அண்ணாமலையார்- உண்ணாமுலையம்மன் கிரிவலம், பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்.

9.12.2022 - சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்

10.12.2022 - சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனம்

 

ஆலய கட்டிட மாற்றம்

இத்தல இறைவன், முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் இங்குள்ள மகிழ மரத்தின் அடியில் சுயம்பு லிங்கமாக, சிறிய மண் சுவர் குடிலில் வீற்றிருந்தார். அது 4-ம் நூற்றாண்டில் செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டு, 5-ம் நூற்றாண்டில் சிறிய ஆலயமாக உருவெடுத்தது. 6, 7, 8 ஆகிய நூற்றாண்டுகளில் சமயக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து அண்ணாமலையாரைப் பற்றி பாடியபோது கூட இது செங்கல் கட்டிடமாகத்தான் இருந்துள்ளது. 9-ம் நூற்றாண்டில் சோழப்பேரரசு செல்வாக்கு பெற்ற நேரத்தில்தான், இவ்வாலயம் மாற்றம் பெறத் தொடங்கியது. அப்போதுதான் முதலாம் ஆதித்த சோழன் இந்த ஆலயத்தை கருங்கல் கருவறையாக மாற்றினான். 10-ம் நூற்றாண்டில் அவனது வாரிசுகள், முதல் மற்றும் இரண்டாம் பிரகாரங்களை கட்டினார்கள். 11-ம் நூற்றாண்டில் இருந்து 17-ம் நூற்றாண்டு வரை பல்வேறு கோபுரங்கள், மண்டபங்கள், சன்னிதிகள் என்று, பல்வேறு மன்னர்களால் புனரமைக்கப்பட்ட இந்த ஆலயம், தற்போது 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப் படுகிறது.

கொப்பரையில் மகாதீபம்

கார்த்திகை தீபத் திருநாள் அன்று மாலை, 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். தீபம் ஏற்றுவதற்காக, 7½ அடி உயர கொப்பரையில், ஆயிரம் கிலோ காடா துணி, 3 ஆயிரம் கிலோ நெய், 2 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றும் உரிமை, பர்வதராஜ குலத்தினருக்கு உரியது. இந்த மகா தீபம், தொடர்ச்சியாக 11 நாட்கள் எரியும். எரிந்த தீபத்தில் இருந்து எடுக்கப்படும் கருப்பு நிற மையானது, ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர் களுக்கு வினியோகிக்கப்படும்.

பெயர்க்காரணம்

'அண்ணுதல்' என்றால் 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணா' என்பதற்கு 'நெருங்க முடியாத' என்று அர்த்தம். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக சிவபெருமான் நின்ற காரணத்தால், இந்த தலம் 'அண்ணாமலை' என்று பெயர் பெற்றது.

'அருணம்' என்பதற்கு 'சிவப்பு நிற நெருப்பு' என்றும், 'சலம்' என்பதற்கு 'மலை' என்றும் பொருள். சிவபெருமான், சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மையுடன் இருப்பதால், இத்தலம் 'அருணாச்சலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

அஷ்டதிக்கு லிங்கங்கள்

திருவண்ணாமலை கோவிலில் கிரிவலம் வரும் வழியில், இந்திர லிங்கம் (கிழக்கு திசை), அக்னி லிங்கம் (தென்கிழக்கு), எமலிங்கம் (தெற்கு), நிருதி லிங்கம் (தென்மேற்கு), வருண லிங்கம் (மேற்கு), வாயு லிங்கம் (வடமேற்கு), குபேர லிங்கம் (வடக்கு), ஈசான்ய லிங்கம் (வடகிழக்கு) ஆகிய எட்டு லிங்கங்கள் இடம்பெற்றுள்ளன. எட்டு திசைகளின் அதிபதிகள் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கங்களாக இவை விளங்குகின்றன. இந்த அஷ்டலிங்க சன்னிதிகளில் வழிபாடு செய்தால், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

Tags:    

மேலும் செய்திகள்