தலையெழுத்தை மாற்றும் திருப்பட்டூர்

பிரம்மாவின் ஆணவத்தால், அவரது ஒரு தலையை கொய்ததுடன், அவர் செய்து வந்த படைப்பு தொழிலையும் பறித்தார், ஈசன். இதையடுத்து பிரம்மதேவன், சிவ பூஜை செய்து மீண்டும் படைப்புத் தொழிலை பெற்ற இடமாக, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திகழ்கிறது.

Update: 2022-08-16 15:04 GMT

இத்தலத்தில் முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். பின்னர் இங்கிருந்து படை திரட்டிச் சென்று அசுரர்களை அழித்துள்ளார். படை திரட்டப்பட்டதால், இத்தலம் 'திருப்படையூர்' என்று வழங்கப்பட்டு, அதுவே மருவி 'திருப்பட்டூர்' ஆனதாக சொல்கிறார்கள். கந்தன் வழிபட்ட இறைவனே 'கந்தபுரீஸ்வரர்' என்ற பெயரில் இங்கு அருள்கிறார்.

இத்தல காலபைரவர் விசேஷமானவர். அர்த்தஜாம பூஜைக்குப்பின் மூலவர் உள்ளிட்ட பிற சன்னிதிகள் மூடப்பட்டதும், அந்த சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்வர்.

அப்போது பிரசாதமாக வழங்கப்படும் விபூதியை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், இரவு வேளையில் தூங்காமல் தொடர்ந்து அழும் குழந்தைகள் நிம்மதியாக தூங்கும் என்பது நம்பிக்கை.

பிரம்மா மங்கலமான வாழ்வை அருள்பவர். எனவே அவருக்கு மஞ்சள் காப்பிட்டு, மஞ்சள் நிற புளியோதரை நைவேத்தியமாக படைத்து, மஞ்சளை பிரசாதமாக கொடுக்கிறார்கள். மற்ற சன்னிதிகளில் உள்ள பெரும்பாலான மூர்த்தங்களுக்கும் மஞ்சள் நிற வஸ்திரத்தையே பயன்படுத்துகின்றனர்.

தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஆலயமாகவும், இத்தல பிரம்மாவும் திகழ்கிறார்கள். விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தங்களின் ஜாதகத்தை, இவரது சன்னிதியில் வைத்து பூஜித்து வாங்கிச்செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

நவக்கிரகத்தில் உள்ள குருவின் அதிதேவதை, பிரம்மன். எனவே இங்கு பிரம்மாவுக்கு வியாழக்கிழமைகளில் குரு தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது.

மூலவர் பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மநாயகி அம்மனையும் வணங்கி, அவர்களுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

இங்கு தல தீர்த்தமாக 'பிரம்ம தீர்த்தம்' உள்ளது. இந்த தீர்த்த நீரை எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர் கங்கையில் நீராடிய பலனைப் பெறுவார்.

திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது.

பிரம்மன் வழிபட்ட தலம் என்பதால், இத்தல மூலவர் 'பிரம்மபுரீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

இங்கு சிவபெருமானே பிரதான மூர்த்தி என்றாலும், பிரம்மன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில் பிரம்மாவுக்கும் பிரமாண்ட சிலை உள்ளது. தனிச் சன்னிதியில் கையில் அட்சமாலை, கமண்டலத்துடன் இவர் காட்சி தருகிறார். இவருக்கு 27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் குறிக்கும் வகையில் 36 தீபங்களும், 108 புளியோதரை உருண்டைகளும் வைத்து வழிபடுவது சிறப்பு.

பிரம்மன் வழிபாடு செய்த ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை கொண்டது) தனி மண்டபத்தில் காணப்படுகிறது.

பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை, 12 சிவலிங்க வடிவில் வழிபட்டு பூஜித்துள்ளார். பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், மண்டூகநாதர், ஐம்புகேஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், கயிலாயநாதர், தாயுமானவர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய 12 லிங்கங்களையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.

பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்கள் உள்ள தலம் என்பதால், இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினாலே, இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்