வாரம் ஒரு திருமந்திரம்
திருமூலர் பாடிய திருமந்திரம், சிவபெருமானை போற்றும் சைவத்தை மட்டுமில்லாது, வாழ்க்கைக்கு தேவையான பாடத்தையும் கற்றுத் தருகிறது.
அந்த திருமந்திர நூலில் இருந்து வாரம் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்த்து வருகிறோம். இந்த வாரமும் ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்ப்போம்.
பாடல்:-
ஆர்க்கும் இடுமின்; அவர்இவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின்; பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.
விளக்கம்:-
யாராக இருந்தாலும் அவர்களுக்கு வேண்டிய உணவு முதலிய பொருளை அளியுங்கள். வேண்டியவர், வேண்டாதவர் என்று எண்ணாதீர்கள். உண்ணும் விருப்பம் கொண்ட நீங்கள் எதனையும் விரைவாக உண்ணாதீர்கள். காக்கை தன் இனமான மற்ற காக்கைகளையும் அழைத்துக் கூடி உண்ணும் நிலையை அறிந்திடுங்கள்.