மன்னிக்க முடியாத பாவம்

பாவங்களை மன்னிப்பவர் இயேசு என்றும், அவரிடம் வேண்டும் போது நம்முடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நமக்கு நிலை வாழ்வை அளிப்பார் என்றும் கிறிஸ்தவம் நம்புகிறது. ஆனால் அந்த இயேசுவே, “ஒரு பாவம் மன்னிக்கப்படாது” என்கிறார்.

Update: 2023-02-17 16:25 GMT

"தூய ஆவியாரைப் பழித்து உரைப்பவர் எவரும் எக்காலத்திலும் மன்னிப்புப்பெறார்; அவர் என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவார்" என்கிறது பைபிள்.

இந்த வசனத்தைப் படிப்பவர்கள், 'ஐயோ.. நான் தூய ஆவியைப் பற்றி தப்பா பேசிட்டேனே, எனக்கு இனிமேல் மன்னிப்பே கிடையாதே, என்று குற்ற உணர்வில் கலங்குவதுண்டு. இந்த வசனத்தைப் படிக்கும் முன், இதை ஏன் இயேசு சொன்னார் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

பேய் பிடித்திருந்த ஒருவரை இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். அவர் பேச்சற்றவராகவும், பார்வையற்றவருமாய் இருந்தார். இயேசு அவரிடமிருந்த பேயை விரட்டி அவரை நலமாக்கினார். அவரால் பேசவும் முடிந்தது, பார்க்கவும் முடிந்தது. இப்போது பரிசேயர்களுக்கு கோபம். அவர்கள் இயேசு செய்த அற்புதத்தைக் கண்டு கடவுளை மகிமைப்படுத்தவில்லை. நோயற்ற ஒருவர் நலமடைந்திருக்கிறாரே என மகிழ்ச்சியடையவில்லை. மாறாக கடவுளின் ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்கினார்கள்.

'இயேசு பேய்களின் தலைவனான பெயல்சபூலைக் கொண்டே பேயோட்டுகிறார்' என்றார்கள். இயேசு அவர்களிடம் சொன்னார் 'தூய ஆவிக்கு எதிராய் கூறப்படும் பழிப்புரைகள் ஒரு போதும் மன்னிக்கப் படமாட்டாது'.தான், தூய ஆவியின் ஏவுதலால் பேயோட்டியதை, தீய ஆவியின் துணையால் பேயோட்டியதாக பரிசேயர்கள் கூறியதால் இயேசு அப்படிச் சொன்னார். சாத்தானே சாத்தானை விரட்டுமா? வீட்டின் தலைவன் அந்த வீட்டிற்கு எதிராகவே கிளர்ந்து எழ முடியுமா? நாடு தனக்கெதிராய் பிளவுபடுமா? என அவர்களிடம் எதிர் கேள்வி கேட்டார்.

பரிசேயர்களுக்கு உண்மை தெரிந்திருந்தது. இயேசுவே மீட்பர் என்பதும் தெரிந்திருந்தது. ஆனால் அவர்களுடைய சட்டங்களுக்கு எதிராய்ச் செயல்பட்டதால் அவர்களால் அவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள் ஆவியானவரை அவமானப்படுத்தினார்கள். எனவே தான் இயேசு அந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார், ஆனால் தூய ஆவிக்கு எதிராய் பேசுபவர் மன்னிக்கப்பட மாட்டார் என்றார் இயேசு. அந்தக்காலத்தில் இயேசு மனிதராகவே வலம் வந்தார். மனிதராகவே செயலாற்றினார். எனவே அவருக்கு எதிராய் அப்போது பேசப்பட்ட வசைகள், அவமானச் சொற்கள் எல்லாவற்றையும் இயேசு மன்னித்தார். தன்னைச் சிலுவையில் அறைந்தவர்களையும், அடித்தவர்களையும், அவமானப்படுத்தியவர்களையும் மன்னித்தார்.

அதற்காக இயேசுவை இன்று அவமானப்படுத்தினால் அது மன்னிக்கப்படுமா?, இன்று தந்தை, மகன், தூய ஆவி மூவருமே திரித்துவக் கடவுளாக நம்மிடம் இருக்கின்றனர். அவர்களில் யாரைப் பழித்தாலும் அது மாபெரும் பாவமே. அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இயேசு இறந்து விண்ணகம் சென்ற பின்பே தூய ஆவியானவரை நமக்கு அனுப்பினார். இன்றைய பார்வையில் தூய ஆவியானவரைப் பழித்துரைப்பது என்பது அவரது வழிகாட்டுதலை நிராகரிப்பதாகும். தூய ஆவியானவர் நமக்குள் இருந்து, நமது பாவம் என்ன என்பதை நமக்கு உணர்த்துகிறார். அதை நாம் தொடர்ந்து

நிராகரிக்கும் போது அவரை பழிக்கிறோம். நாம் செல்ல வேண்டிய வழி என்ன என்பதை அவர் தொடர்ந்து நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.அதை நாம் தொடர்ந்து புறக்கணிக்கும் போது நாம் அவருக்கு எதிரான பாவம் செய்கிறோம். அவர் நமது துணையாளனாய் வருகிறார், அவரை நாம் பகையாளனாய்ப் பார்க்கும் போது அவரை பழித்துரைக்கிறோம்.

தூய ஆவியானவரே கடவுளைப் பற்றிய உண்மைகளை நமக்கு விளக்குகிறார். நாம் செய்கின்ற செயல் இறைவனுக்கு ஏற்புடையதா என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறார். அவரை நாம் நிராகரித்தால் பாவத்தை உணர மாட்டோம். பாவத்திலிருந்து வெளிவர முயல மாட்டோம். மனம் திரும்பி மன்னிப்புக் கேட்க மாட்டோம். இருட்டிலேயே கிடப்பவனுக்கு வெளிச்சம் கிடைக்காது. படுத்தே கிடப்பவனுக்கு நடப்பதே மறந்து விடும். இவைஎல்லாம் அழிவையே கொண்டு வரும்.

எனவே தூய ஆவியானவரை ஏற்றுக்கொண்டு, தூய வழியில் நடக்க வேண்டும் என்பதே இந்த வசனம் சொல்லும் செய்தியாகும். பலர் இதை வைத்துக்கொண்டு, 'நான் பாடுவது தூய ஆவியால், என்னை விமர்சிப்பது தூய ஆவிக்கு எதிரானது. நான் போடும் ஆடை தூய ஆவிக்கானது, இதை விமர்சிப்பது தூய ஆவிக்கு எதிரானது. நான் பேசுவது ஆவியினால், என்னை விமர்சிப்பது தூய ஆவிக்கு எதிரானது' என்றெல்லாம் சொல்வார்கள். அவற்றையெல்லாம் புறக்கணியுங்கள்.

இயேசுவே சொன்னார், 'போலிகளை அவர்களுடைய கனிகளினால் கண்டு கொள்வீர்கள்' என்று. எனவே ஆவிக்கு எதிரான பாவம் என்பது தூய ஆவியானவர் காட்டுகின்ற வழியில் நடக்காமல் அவரை நிராகரிக்கும் பாவம். தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்று அவர் காட்டும் அன்பின் வழியில் நடப்போம். நிலை வாழ்வை அடைவோம்.

Tags:    

மேலும் செய்திகள்