உத்தரகாண்ட் மாநிலத்தில், ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ளது, சிவபெருமானின் முக்கியமான தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோவில். இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது, கவுரிகுண்டம் என்ற இடம். இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் கார்வால் கோட்டத்தில் அமைந்த இமயமலையில் 6 ஆயிரத்து 520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கவுரி குண்டத்தில் வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன.
சிவபெருமானை திருமணம் செய்வதற்காக, பார்வதி நீராடி தவம் இருந்த இடமே 'கவுரி குண்டம்'. திருமணத்திற்குப் பின்னர், விநாயகப் பெருமானை பார்வதி தேவி தன்னுடைய மகனாக பெற்றதும் இந்த இடம்தான். அந்த வகையில் இந்த கவுரி குண்டம் விநாயகர் அவதரித்த இடமாகவும் அறியப்படுகிறது. இங்குள்ள ஆலயத்தில் பார்வதி தேவி தன்னுடைய கரங்களில் விநாயகரை தூக்கி வைத்திருக்கும் சிற்பம் ஒன்று மலைப் பாறைகளிலேயே வடிக்கப்பட்டிருக்கிறது.