இறைமகன் தரும் நம்பிக்கை ...

வேதாகமத்தில் ‘பயப்படாதே’ என்னும் வார்த்தை கடவுளின் வாக்குறுதியாய் 365 முறை கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்தின் 365 நாட்களுக்கும், கடவுளை நம்புகிறவர்களுக்கு, ‘நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்’ என்று கடவுள் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

Update: 2022-05-24 12:27 GMT

வேதாகமத்தில் ஆகார் என்ற பெண்மணி தன் குழந்தையுடன் பாரான் வனாந்திரத்தில் நடந்து செல்கிறாள். அவர்களிடம் இருந்த உணவு, தண்ணீர் அனைத்தும் பயணத்தின் பாதிவழியிலேயே தீர்ந்துவிட்டது. அவள் நடந்து செல்வதோ கடுமையான வெப்பமும், புழுதிக்காற்றும் அடிக்கின்ற வறண்ட பாலைவனம். அந்த பாலை வனத்தில் அவளுக்கு உதவி செய்வதற்கு யாரும் கிடையாது. பசியாலும், தாகத்தாலும் குழந்தை துடித்து அழுதது.

அப்போது, பாலைவனத்தில் உள்ள ஒரு செடியைக்கண்டு, அந்த செடியின் நிழலில் குழந்தையை விட்டு விட்டு, சற்று தூரமாக போய் நின்று கதறுகிறாள். 'உணவு, தண்ணீர் இல்லாமல் குழந்தை சாவதை நான் பார்க்க மாட்டே ன்' என்று உரத்த குரலில் சத்தமிட்டு அழுகிறாள். அந்த அழுகையின் குரலை கேட்பதற்கு எந்த மனிதர்களும் அந்த இடத்தில் கிடையாது.

'தாகத்தால் சோர்வுடன் அழுத பிள்ளையின் சத்தத்தை தேவன் கேட்டார்'. தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு, "ஆகாரே உனக்கு என்ன நேர்ந்தது?, 'பயப்படாதே'. பிள்ளை இருக்கும் இடத்தில் தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக் கொண்டு போ , அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்". (ஆதியாகமம் 21:17,18,19) தேவன் அவளுடைய கண்களுக்கு அந்த வறண்ட பாலை வனத்திலே ஒரு தண்ணீர்த்தடாகத்தைக் காட்டினார். அவள் ஓடிப்போய் தான் வைத்திருந்த தோல் பையிலே தண்ணீரை நிரப்பி, பிள்ளைக்கு குடிக்கக் கொடுத்தாள். உண்பதற்கு உணவில்லை, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று அழுத அவளுக்கு வறட்சியான பாலைவனத்தில் தண்ணீரும் கொடுத்து, அவனை பெரிய ஜாதியாக்குவேன் என்று வாக்குத்தத்தமும் கொடுக்கிறார், என்றால் நமது தேவன் எத்தனை மகிமை மிக்கவர் என்பதை அறியலாம்.

மேலும் தன்னை நம்பி அழைத்தவர்களின் குரலுக்கு அவர் உடனே பதில் அளிக்கக்கூடியவர் என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். அன்பானவர்களே , இன்று நாமும் ஒரு தன்னந்தனியான சூழலில், எந்த உதவியும் இல்லாத நிலையில் தவித்துக் கொண்டு இருக்கலாம். நோய்களை குறித்த பயம், வருமானத்தை குறித்த பயம், கடன் தொல்லைகளால் வரும் பயம், தேர்வு தோல்வியை குறித்த பயம், பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து பயம்... இப்படி ஏதோ ஒரு பயத்தினால் கலங்கி தவிக்கின்றீர்களா? ஆகாரின் கண்ணீரைக் கண்டு உதவிய தேவன், அவளது பயத்தை மாற்றிய தேவன், அவளது தேவைகளை சந்தித்த தேவன், உயர்வைக்கொடுத்த தேவன், இன்று உங்களுடைய பயம், கலக்கம், கவலைகளை நீக்கி, உங்கள் தேவைகளையும் நிறைவேற்றுவார்.

ஆகவே , நம்பிக்கையோடு தேவனிடம் சரணடையுங்கள். பயப்படாதிருங்கள், தேவன் எல்லா சூழ்நிலைகளிலும் உங்களோடு இருப்பார். உங்களது கவலை , பயம், கலக்கங்களை கடவுளிடத்தில் கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் நடந்து செல்லுங்கள். கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

நெல்லை மானக் ஷா.

Tags:    

மேலும் செய்திகள்