சிருங்கேரி சாரதாம்பாள் கோவில்
கர்நாடகத்தில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் ஆடம்பரமான விழா நடைபெறும் இடம் சிருங்கேரி.;
இங்கு 40 கோவில்கள் உள்ளன. சிக்கமகளூரு மாவட்டம் துங்கபத்ரா நதியின் இடது கரையில் உள்ள சாயாதிரி மலையில் சிருங்கேரி அமைந்துள்ளது. இது ரிஷிய சிருங்கர் மகரிஷி பிறந்த இடமாகும். இங்குள்ள வித்ய சங்கரா கோவிலில் சிவப்பு கல்லில் (ரூபி) வடிவமைக்கப்பட்ட வேணுகோபால் மற்றும் முத்தினால் செய்யப்பட்ட சீனிவாசா, நந்தி சிலைகள் சிற்பக்கலை உள்ள பீடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலுக்கு செல்ல 6 வாசல்கள் உள்ளன. 12 தூண்கள் உள்ள மண்டபமும் இங்கு இருக்கிறது. இந்த 12 தூண்களும் 12 ராசிகளுக்கு உரிய தூண்கள் என அழைக்கப்படுகிறது. இந்த தூண்களின் மீது அந்தந்த ராசிகளுக்கு உரிய நாட்களில் சூரிய ஒளி விழுகிறது. ஒவ்வொரு தூணிலும் கர்ஜிக்கும் சிங்கத்தின் தலையும் அவற்றின் வாயில் சுழலும் கல்பந்தும் உள்ளன. கர்ப்பகிரகத்தில் வட்ட வடிவிலான கலசம் உள்ளது. கோவிலின் சுவர்களில் புராண கதைகளை விளக்கும் 61 ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. ஆற்றின் மறுகரையில் இருந்து பார்த்தால் அன்னம் ஒன்று தண்ணீரில் மிதப்பது போல் தெரியும்.
சிருங்கேரியில் பிரசித்தி பெற்ற சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பீடத்தின் மீது ஜெபமாலையுடன் சாரதா தேவி தோளில் கிளி ஒன்று நிற்கிறது. முதலில் சந்தன மரத்தால் ஆன சிலையை ஆதி சங்கரர் நிறுவினார். 14-ம் நூற்றாண்டில் அந்த சிலை மாற்றப்பட்டு, தங்கத்தினால் ஆன சாரதா தேவி சிலை நிறுவப்பட்டது. இங்கு ஆதி சங்கரர், சக்தி கணபதி, மகிஷாசூரமர்த்தினி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகிய சிலைகளும் உள்ளன. பெங்களூருவில் இருந்து 320 கிலோ மீட்டர் தொலைவிலும், சிக்கமகளூருவில் இருந்து 85 கிலோ மீட்டர் தொலைவிலும் சிருங்கேரி உள்ளது.