ஆன்மீகம்- ஆசையை வரவேற்போம்... பேராசையை தவிர்ப்போம்...

இஸ்லாத்தின் பார்வையில் ஆசைக்கும், பேராசைக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஆசை என்பது அவசியமானது; அழகானது. பேராசை என்பது அனாவசியமானது; ஆபத்தானது.

Update: 2023-06-13 11:39 GMT

அவசியமானதை அடைவதற்காக கவனம் செலுத்துவது, அதற்காக முயற்சிப்பது, அதற்காக உழைப்பது, அதற்காக சிரமப்படுவது போன்றவை வரவேற்கப்பட வேண்டிய விஷயங்களாகும். ஆசை என்பது அளவில் குறைவானதாகவோ, கூடுதலாகவோ இருந்தாலும் சரியே.

பேராசை என்பது அனாவசியமானது. அத்தியாவசியமில்லாத ஒன்றை பெறுவதற்காக அலைந்து திரிவது. பேராசைப்படும் பொருள் பெருமதிப்பு உடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அற்பமானதை அடைவதிலும் கூட பேராசை தென்படலாம். உதாரணமாக, உயிர் காக்கும் உயரிய மருத்துவ சேவை பெற பல லட்சங்கள் தேவைப்படலாம். அந்தப்பணத்தை திரட்ட முயற்சி செய்வது என்பது அவசியமான, அத்தியாவசியமான ஆசையாகும். அதே நேரத்தில் தேவையை விட அதிகமாக தன் வசம் பொருள் இருந்த போதிலும், தேவையே இல்லாமல் அற்பக்காசுக்காக அடுத்தவரிடம் கூனிக்குறுகி நின்று, சுயமரியாதையை இழந்து அதைத் தேடுவது என்பது பேராசையாகும்.

முக்கியமான பல கடமைகள் இருந்தும் இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் பணம், சொத்து என்று இவற்றுக்குப் பின்னால் அலைவது பேராசையாகும். போதும் என்ற மனம் ஆசையாகும். எவ்வளவு கொடுத்தாலும் மனமும், வயிறும் நிரம்பாமல் இருப்பது பேராசையாகும்.

இஸ்லாத்தில் அளவுடன் ஆசைப்படுவதற்கு அனுமதியுண்டு. அளவில்லாமல் கண்டபடி பேராசைப்படுவதற்கு அனுமதி இல்லை. ஒரு வேளை பேராசை கொள்ள வேண்டுமானால் பின்வரும் இரண்டு விஷயங்களில் மட்டுமே கொள்ளலாம். "ஒருவருக்கு இறைவன் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு இறைவன் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக்கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக்கூடாது என நபி (ஸல்) கூறினார்கள்". (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி)

பேராசையின்றி பொருளைப்பெறலாம்:

"உமர் (ரலி) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்புச் செய்யும் வழக்கமுடையவராக இருந்தார்கள். நான் 'இதை என்னை விட ஏழைக்கு கொடுங்களேன்' என்பேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இதை வாங்கிக்கொள்ளும்; நீர் பிறரிடம் கேட்காமலும், பேராசை கொள்ளாமலும் இருக்கும்போது இவ்வாறு வரும் பொருட்களைப் பெற்றுக்கொள்ளும். ஏதும் கிடைக்கவில்லை என்றாலும் அப்பொருட்களுக்குப் பின்னால் உமது மனதை தொடரச் செய்யாதீர். (அது கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டாம்) என்றார்கள்". (நூல்: புகாரி)

பேராசையில் அபிவிருத்தி ஏற்படாது:

"ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) கூறுகிறார்: 'நான் நபி (ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் கொடுத்தார்கள். பிறகும் கேட்டேன், கொடுத்தார்கள். பிறகு என்னிடம், 'ஹகீமே, இச்செல்வம் (பார்க்க) பசுமையானதும், (சுவைக்க) இனிமையானதும் ஆகும். இதை தாராள மனதுடன் (பேராசையின்றி) எடுத்துக் கொள்பவருக்கு இதில் அபிவிருத்தி வழங்கப்படுகிறது. இதை பேராசையுடன் எடுத்துக் கொள்பவருக்கு இதில் அபிவிருத்தி வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும், வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்' என நபி (ஸல்) கூறினார்கள்". (நூல்: புகாரி)

'இறுதிக்காலத்தில் மக்களின் ஆயுட்காலம் சுருங்கி விடும்; நற்செயல்கள் குறைந்துவிடும்; (பேராசையின் விளைவாக) மக்களின் மனங்களில் கருமித்தனம் உருவாக்கப்படும். 'ஹர்ஜ்' பெருகிவிடும் என்று நபி (ஸல்) கூறியபோது, 'ஹர்ஜ்' என்றால் என்ன?' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அது 'கொலை... கொலை...' என்று இரண்டு தடவை கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

'ஆதமின் மகனுக்குத் (மனிதனுக்கு) தங்கத்திலான ஒரு நீரோடை இருந்தால், தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் பேராசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணைத் (மரணத் தை) தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இதுபோன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொள்கிறான்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

'நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை செல்வத்தைப் பெருக்கும் பேராசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி (திருப்பி) விட்டது'. (திருக்குர்ஆன் 102:1,2)

நியாயமான ஆசைகளை வரவேற்போம், வளர்ப்போம். இறைவனை விட்டு நம்மை தூரமாக்கும் பேராசையை விட்டொழிப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்