ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

சஞ்சீவி ராயன் என்பது அனுமாரின் பெயர். அதையே `சஞ்சீவி' என்று குறுக்கி-சுருக்கி வைத்துக் கொள்வார்கள்.

Update: 2023-06-20 13:39 GMT

கேள்வி:- திருமாலின் பஞ்ச (5) ஆயுதங்களில் சங்கையும் ஒன்றாகச் சொல்கிறார்கள். சங்கு இசைக்கருவி அல்லவா? அது எப்படி ஆயுதம் ஆகும்? (மு.ரிச்சிதா, விழுப்புரம்)

பதில்:- சங்கை ஊதி, தன்னை எதிர்க்க வந்தவர்களை கண்ணன் சங்காரம் செய்தார். தேவ உலகில் உள்ள பாரிஜாத மரத்தைக் கொண்டுவர முயன்றபோது, இது நடந்தது. ஆகவே சங்கை, ஆயுதம் என்று சொல்வது சரி தான்.

கேள்வி:- அசல தீபேசுவரர் என்பது எந்த சாமி? எங்கு உள்ளது? (ம.சங்கரராமன், திருத்தணி)

பதில்:- சிவபெருமானைக் குறிக்கும் பெயர் இது. சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமான் திருநாமம்- அசல தீபேசுவரர். சிவலிங்கப் பெருமானுக்குப் பின்புறமாக உள்ள விளக்குகள் அசையாமல் எரிவதால் `அசல தீபேசுவரர்' எனப்பெயர் பெற்றார்.

கேள்வி:- சப்த மாதாக்கள் என்பவர் யார்? (க.அம்சவேணி, சிவகங்கை)

பதில்:- அபிராமி, வைஷ்ணவி, மகேசுவரி, கவுமாரி, வாராகி, நாரசிம்மி, இந்திராணி - என்பவர்கள் சப்த மாதாக்கள். பிரம்மனுடைய சக்தி - அபிராமி; பிராம்மணி என்றும் கூறுவர். விஷ்ணுவின் சக்தி-வைஷ்ணவி; மகேசுவரனுடைய சக்தி - மகேசுவரி; குமார (முருகப்பெருமா) னுடைய சக்தி-கவுமாரி; வராக மூர்த்தியின் சக்தி-வாராகி; நரசிம்மரின் சக்தி-நாரசிம்மி; இந்திரனின் சக்தி-இந்திராணி.

கேள்வி:- வலம்புரி விநாயகர், நரமுக விநாயகர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். `திறை கொண்ட விநாயகர்' என்று சொல்கிறார்கள். அப்படி ஒரு விநாயகர் உண்டா? (உ.கலைவாணன், திருநெல்வேலி)

பதில்:- இப்பெயர் கொண்ட விநாயகர் திருவண்ணாமலையில் இருக்கிறார். பொல்லாத அரசன் ஒருவனின் கனவில் தோன்றி, பயமுறுத்தித் திருத்தினார். அவன் யானைகள் பலவற்றைக் கொண்டுவந்து, திறையாக (கப்பம்) வழங்கினான். அதனால் இந்த விநாயகர், `திறை கொண்ட விநாயகர்' எனப் பெயர் பெற்றார்.

கேள்வி:- விமானம், கோபுரம்; கோவில், ஆலயம் என்பவை - ஒன்றா? வேறா? (ஏ.மல்லிகா, நாகர்கோவில்)

பதில்:- வேறு வேறு. நுழைவு வாசல்களுக்கு மேலாகக் கட்டி இருப்பது - கோபுரம். கடவுள் எழுந்தருளி இருக்கும் கருவறைக்கு மேல் உள்ளது - விமானம். தெய்வம் எழுந்தருளி இருக்கும் கருவறை, 'கோவில்' எனப்படும். அதையும் சேர்த்து அங்குள்ள தீர்த்தக் கிணறுகள், தல மரங்கள் என அனைத்தும் சேர்ந்தது 'ஆலயம்'. உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் என்னும் திருமூலர் திருமந்திரப் பாடலில் இதற்கான விளக்கம் உள்ளது.

கேள்வி:- சஞ்சீவி என்று பெயர் வைத்துக் கொள்கிறார்கள். அது எந்த சாமியைக் குறிக்கும்? (ச.மகேந்திரன், திருவாரூர்)

பதில்:- சஞ்சீவி ராயன் என்பது அனுமாரின் பெயர். அதையே `சஞ்சீவி' என்று குறுக்கி-சுருக்கி வைத்துக் கொள்வார்கள். ராம -ராவணப் போரில் மயங்கிக் கிடந்த லட்சுமணன் முதலானோரை எழுப்புவதற்கு `மிருத சஞ்சீவினி' என்ற மூலிகை உள்ள `சஞ்சீவி' மலையை அனுமார் கொண்டு வந்ததால், சஞ்சீவி ராயன் எனப் பெயர் பெற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்