கல்விக்கு அதிபதியான சரஸ்வதிக்கு, கோவில்களில் பலவற்றில் விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும். சில கோவில்களில் தனியான சிறிய சன்னிதிகளும் இருக்கும். ஆனால் தமிழ்நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில்தான், சரஸ்வதி தேவிக்கு என்று தனியாக கோவில் இருக்கிறது. அது நாகப்பட்டினம் மாவட்டம் கூத்தனூரில் உள்ளது. பெரும் புலவரான ஒட்டக்கூத்தருக்கு, சோழ மன்னன் தானமாக வழங்கிய ஊர் என்பதால் இது 'கூத்தனூர்' என்று பெயர் பெற்றது. அந்தப் புலவர் தன்னுடைய புலமைக்கு அருள்பாலித்த சரஸ்வதிக்கு, அவ்வூரில் ஒரு கோவிலை அமைத்தார். தமிழில் ராமாயணம் எழுதிய கம்பர், இத்தல சரஸ்வதி மீது, 'சரஸ்வதி அந்தாதி' பாடியுள்ளார்.