பூரி ஜெகநாதர் ரத யாத்திரை கோலாகலம்... பிரமாண்ட தேர்களை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர்.;
பூரி:
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிக பிரமாண்டமாக நடைபெறும். ஜெகநாதரின் 12 யாத்திரைகளில் ரத யாத்திரை மிகவும் புனிதமானது மற்றும் மிகவும் பிரபலமானது.
மூலவர்களான பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகநாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பூரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்பட்டு, அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ஜெகநாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தேபாதலனா ஆகிய 3 பிரமாண்டமான தேர்கள் உருவாக்கப்படும். 16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகநாதரும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களுடன் அமைந்துள்ள தேரில் சுபத்ராவும் எழுந்தருள, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. மாலையில் பூரி சங்கராச்சாரியார் சுவாமி நிச்சலநாத சரஸ்வதி தனது சீடர்களுடன் ஜெகநாதர், பாலபத்திரர் மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரின் தேர்களை தரிசனம் செய்தனர். பின்னர், பூரியின் பட்டத்து மன்னர், சேர பஹன்ரா (தேர் துடைத்தல்) என்ற சடங்கை செய்தார். பாரம்பரிய வழக்கப்படி தங்க துடைப்பத்தால் தேர்களை சுத்தம் செய்தார்.
இந்த சடங்கு முடிந்ததும், மாலை 5.20 மணியளவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ், ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் ஜெகநாதர் தேரின் வடம் பிடித்து இழுத்து ரத யாத்திரையை முறைப்படி தொடங்கி வைத்தனர். எதிர்க்கட்சி தலைவர் நவீன் பட்நாயக்கும் தரிசனம் செய்தார்.
அதன்பின் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுக்கத் தொடங்கினர். முதலில் பாலபத்திரர் தேர் இழுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுபத்ரா தேர், அதன்பின் ஜெகநாதர் தேர் இழுக்கப்பட்டது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களும் பூரி நகரின் வீதிகளில் அசைந்தாடி செல்லும் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
9 நாட்கள் இந்த திருவிழா நடக்கும். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள குண்டிச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகநாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகநாதரை காண லட்சுமி தேவி, குண்டிச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகநாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவுபெறும்..