ஸ்ரீ ராம நவமியன்று செய்ய வேண்டியது என்ன?

ராம நாமத்தை உச்சரிப்பதுடன், ராமரை பற்றிய நூல்களை படிப்பது, ராம சரிதத்தை கேட்பது நன்மை அளிக்கும்.;

Update: 2024-04-17 05:44 GMT

பகவான் ஸ்ரீ ராமரின் அவதார திருநாளான ராம நவமி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பக்தர்கள் தங்களின் வீடுகளில் பட்டாபிஷேக ராமர் படத்துக்குப் பூக்களை சூடி நைவேத்தியங்களைப் படைத்து, ஸ்ரீ ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும். குறிப்பாக, ராமபிரானுக்கு நைவேத்தியமாக நீர்மோர் மற்றும் பானகம் படைப்பது சிறப்பு.

ராம நாமத்தை உச்சரிப்பதுடன், ராமரை பற்றிய நூல்களை படிப்பது, ராம சரிதத்தை கேட்பது நன்மை அளிக்கும். ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று ராமபிரானை வழிபடலாம். ராம நவமி நாளில் காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.

இஸ்கான் கோவில்களில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருநெல்வேலி, மதுரை மற்றும் பெரியகுளத்தில் உள்ள இஸ்கான் கோவில்களில் காலை முதலே ராம நவமி சிறப்பு அலங்காரம், மகா ஆரத்தி, ஸ்ரீராமநாம சங்கீர்த்தனம், ஸ்ரீராம கதா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இன்று மாலை 5.30 மணியளவில் மகா அபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் பங்கேற்று பகவான் ஸ்ரீ ராமரின் திருவருளை பெறும்படி இஸ்கான் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நன்னாளில் பக்தர்கள் செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தும் இஸ்கான் ஆலோசனைகளை வழங்கியிருக்கிறது.

1. நாம ஜபமே முதல் முக்கியம்:

ஸ்ரீராமர் அவதரித்த ஸ்ரீராம நவமி அன்று ஸ்ரீராமரின் திருநாமத்தை உச்சரித்து வழிபட வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே என்ற பதினாறு வார்த்தைகளடங்கிய மஹாமந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் 16 முறை 'ராம' நாமம் சொன்ன பலனும், 16000 முறை 'விஷ்ணு' நாமம் சொன்ன பலனும் கிடைக்கும். எனவே ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகபட்சம் உச்சரிக்கலாம்.

2. ஸ்ரீராம நவமி விரதம்:

''ஸ்ரீராம நவமி விரதத்தை பக்தியுடன் கடைபிடிப்பவர், எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு,தனது வாழ்வில் முழு வெற்றியை அடைவார்'' என்று ஹரி பக்தி விலாசம் குறிப்பிடுகிறது. ஸ்ரீராம நவமியன்று சூரிய அஸ்தமனம் வரை விரதம் இருப்பது நல்லதாகும். பொதுவாக முழு விரதம் கடைபிடித்து பகவானை வழிபடுவது சிறப்பு. உடல் நலம் குறைந்தவர்கள் நீர், பால், பழம் உட்கொண்டு ஏகாதசி விரதம் போல் கடைபிடிக்கலாம்.

3. ஸ்ரீராம சரிதம் :

ஸ்ரீராம நவமி அன்று ஸ்ரீராமரின் தெய்வீக சரிதத்தை பற்றி படிப்பதும், கேட்பதும் முக்கியமாகும். எனவே வால்மீகி ராமாயணம் படிக்கலாம். ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாம் காண்டத்தில் உள்ள ஸ்ரீராம அவதாரம் பற்றிய பகுதிகளையும் படிக்கலாம். இஸ்கான் கோவில்களில் நடைபெறும் ஸ்ரீராமாயண சிறப்புரைகளில் பங்கேற்கலாம்.

4. ஸ்ரீராம நவமி தரிசனம்:

ஸ்ரீராம நவமி அன்று குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று பகவானை தரிசிப்பது மிகவும் முக்கியமாகும்.  

Tags:    

மேலும் செய்திகள்