குழந்தை வரம் அருளும் கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடகச்சேரி என்ற இடத்தில் ‘கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்’ அமைந்திருக்கிறது.

Update: 2022-10-25 01:43 GMT

இத்தல இறைவன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல பெருமாள், கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்களின் உள்ளம் மகிழ்வதால், இவருக்கு 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்ற திருநாமம் ஏற்பட்டது.

இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளின் திருநாமம் வந்ததற்கான காரணம், ராமாயணத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மாய மான் மூலமாக ராமரை வனத்திற்குள் அனுப்பிவிட்டு, அவருக்குப் பின்னால் லட்சுமணனையும் போகச் செய்து, தனியாக இருந்த சீதையை கடத்தினான், ராவணன். அவனுடன் போராடிப்பார்த்தும் சீதையால் தப்பிக்க முடியவில்லை. தான் கடத்தப்படுவது பற்றி கணவருக்கு தெரிவிக்க நினைத்த சீதாதேவி, தன் உடலில் அணிந்திருந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழற்றி, வழிநெடுகிலும் வீசினாள். அப்படி அவள் வீசிய ஆபரணத்தில் 'பாடகம்' எனப்படும் காலில் அணியும் கொலுசும் ஒன்று.

மானைத் தேடிச் சென்ற ராமரும், லட்சுமணரும் குடிலுக்கு திரும்பியபோது, அங்கு சீதை இல்லை. அவளைத் தேடி வனத்திற்குள் புறப்பட்டனர். அப்போது ஆங்காங்கே சில ஆபரணங்கள் சிதறிக் கிடப்பதை ராமர் கண்டார். அவை யாருடையது என்ற கேட்டதற்கு, 'தெரியாது' என்ற பதிலை உதிர்த்தார் லட்சுமணன். ஒரு இடத்தில் பாடகம் கிடந்தது. அதைக் காட்டியபோது, "இது அண்ணியாருடையது. நான் அதை கண்டிருக்கிறேன்" என்று மகிழ்வுடன் லட்சுமணன் கூறினார்.

எவ்வளவோ ஆபரணங்களை காட்டியும், காலில் அணியும் ஆபரணத்தை லட்சுமணன் அடையாளம் கண்டு கொண்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் அண்ணன் மற்றும் அண்ணியாரின் முன்பாக தலை தாழ்த்தியே இருந்த காரணத்தால், உடலில் அணிந்த ஆபரணங்களை விட, காலில் அணிந்த கொலுசையே நினைவில் வைத்திருந்தார் லட்சுமணன். அதை அறிந்ததும் ராமபிரான் உள்ளம் மகிழ்ந்தார். இதனால் இறைவனுக்கு, 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்றும், இவ்வூருக்கு 'பாடகப்பதி' என்றும் பெயர் வந்ததாக சொல்கிறார்கள். பாடகப்பதி என்பதே பின்னாளில் 'பாடகச்சேரி' ஆனதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இத்தல பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் அவர்களின் மகிழ்ச்சி இருமடங்காகும் என்பது ஐதீகம். ஆலயத்தில் கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகியோரின் கல் திருமேனிகளும் உள்ளன.

இந்த ஆலயத்திலேயே சவுந்தர நாயகி உடனாய பசுபதீஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பிள்ளையார், நந்தியுடன், இறைவனும் அம்பாளும் ஒரே கூரையின் கீழ் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாக போற்றப்படுகிறது. பார்வதியைத் தவிர வேறு எவருக்கும் தெரியாத வகையில், இத்தலம் உள்ள இடத்தில் சிவபெருமான் புற்றுமண் மூடியநிலையில் தவம் இயற்றி வந்தார். ஆனால் காமதேனு பசு, இதுபற்றி அறிந்து புற்றின் மீது பால் சுரக்கும் வேலையை தினமும் செய்து வந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், அம்பாளுக்கும், காமதேனுவுக்கும் காட்சி தந்து அருளினார். காமதேனு பால் சுரந்த காரணத்தால், இத்தல இறைவனுக்கு 'பசுபதீஸ்வரர்' என்ற பெயர் வந்தது.

கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாளை வழிபாடு செய்து வந்தால், வசூல் ஆகாமல் இருந்து வந்த கடன் தொகை கைக்கு கிடைக்கும். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அந்த பலனும் கிடைக்கப்பெறும்.

திருவாரூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கிேலாமீட்டர் தூரத்திலும் பாடகச்சேரி திருத்தலம் அமைந்திருக்கிறது.

பாடகச்சேரியில் வாழ்ந்த மகான்

பாடகச்சேரி திருத்தலம், மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த ஊர் ஆகும். இவர் மிகச்சிறந்த பைரவ பக்தர். கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நிகழ்த்தியவர் என்ற பெரும் பேறுக்குரியவர் ராமலிங்க சுவாமிகள். இன்னும் பல கோவில்களின் திருப்பணியையும் இவர் செய்திருக்கிறார். பெரும் தெய்வீக சக்தியைக் கொண்ட இவர், பலரது வியாதிகளை குணமாக்கி இருக்கிறார். பாடகச்சேரியில் அவர் தங்கியிருந்த இடத்தில் அவருக்கு ஒரு மடம் கட்டப்பட்டுள்ளது. அதில் அவர் சமாதியான ஆடிப்பூரம் மற்றும் பிற பவுர்ணமி நாட்களில் அன்னதானம் செய்யப்படுகிறது. ராமலிங்க சுவாமிகளின் ஜீவசமாதி, திருவொற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்