பங்குனி உத்திரத்தில் மட்டும் பூ பூக்கும் தல விருட்சம்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவிலும் குலதெய்வ வழிபாட்டுக்கு புகழ் பெற்றது. காவல்கிணற்றில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு கருங்குளம் பைபாஸ் சாலையோரம், இந்த பூ சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

Update: 2023-04-04 11:23 GMT

பங்குனி உத்திரத்தன்று குலதெய்வ கோவிலில் வழிபடுவது சிறப்புக்குரியது. பல்வேறு ஊர்களில் வசிப்பவர்களும் குலதெய்வ கோவிலில் ஒன்றுகூடி வழிபடுவதை கடமையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தெற்கு கருங்குளம் பூ சாஸ்தா கோவிலும் குலதெய்வ வழிபாட்டுக்கு புகழ் பெற்றது. காவல்கிணற்றில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் தெற்கு கருங்குளம் பைபாஸ் சாலையோரம், இந்த பூ சாஸ்தா கோவில் அமைந்துள்ளது.

பெயரில் பூவின் மென்மை இருந்தாலும், கோவிலின் வரலாறு, சிறு அச்சத்துடன் பயபக்தியை மேலிடச் செய்வதாகவே இருக்கிறது. பழங்காலத்தில் தெற்கு கருங்குளத்தில் செல்வாக்குமிக்க பக்தர் ஒருவர் வசித்தார். அவர், பூ சாஸ்தா கோவில் அருகில் இருந்த பாறாங்கல்லில் ஒரு செக்கை செய்து வீட்டிற்கு எடுத்து வர முயன்றார். ஆனால் எவ்வளவோ முயன்றும் அந்த கல் செக்கு நகராததால், அவர் குழப்பமடைந்தார். அப்போது அங்கு மாடு மேய்த்து கொண்டிருந்த ஒருவர் மீது சாமி அருள் வந்தது. அப்போது அவர், 'பங்குனி உத்திரத்தில் நான் கேட்கும் படையலிட்டால் செக்கு நகரும்' என அந்த பக்தரிடம் கூறினார். அதனை ஏற்றுக் கொண்ட அவரும் கோவிலில் சத்தியம் செய்து கொடுக்க செக்கு நகர்ந்தது.

நரபலி கேட்ட சாஸ்தா

அதன்பிறகு பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்ற பக்தர், சாஸ்தாவிடம் 'என்ன படையல் வேண்டும்?' என்று கேட்க, அப்போது அருள் வந்து சாமியாடியவர் கூறியதைக் கேட்டு அவர் அதிர்ந்து போனார். 'எனக்கு படையலாக நரபலி தர வேண்டும்' என பூ சாஸ்தா கேட்க, சத்தியம் செய்து கொடுத்த பக்தர் செய்வதறியாது திகைத்தார். வேறு வழியின்றி தனது வீட்டில் வேலை செய்த ஒரு பெண்ணை, அவர் நரபலி கொடுத்தார்.

இனி ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்தரத்தன்று அந்த பக்தர் நரபலி கொடுப்பார் என அஞ்சிய ஊர் மக்கள் அங்கிருந்து காலி செய்து விட்டு வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் பூ சாஸ்தா கோவில் நாளடைவில் பூஜையின்றி களையிழந்தது. இதற்கிடையே வேறு ஊர்களுக்கு சென்ற மக்களும் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டனர்.

இதற்கு தீர்வு காண நினைத்த அந்த ஊர் மக்கள் அனைவரும், மீண்டும் பூ சாஸ்தா கோவிலில் கூடி நின்று கண்ணீர்மல்க வணங்கி வழிபட்டனர். அப்போது 'நரபலிக்கு பதிலாக ஒரு கோட்டை நெல் குத்தி கொழுக்கட்டையாக செய்து பங்குனி உத்திரத்தில் படையலிட்டால் உங்கள் கஷ்டம் தீரும்' என அருள்வாக்கு தந்தார் பூ சாஸ்தா.

அன்று தொடங்கி இன்று வரை பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலில் மெகா கொழுக்கட்டை படையல் தொடர்கிறது. இதற்கான நெல்லையும் அந்த பக்தர் வீட்டில் இருந்தே பரம்பரை பரம்பரையாக கொடுக்கின்றனர்.

பங்குனி உத்திரத்தன்று பூ சாஸ்தா கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். அன்றைய தினம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

கோவிலில் உள்ள பூ சாஸ்தா, சங்கிலிபூதத்தார், ஆலிபப்பம்பரத்தி, வன்னியராஜா, பொற்கலை புஷ்கலா, முருகன் ஆகிய தெய்வங்களுக்கு பூஜைகள் நடக்கிறது. 15 நாட்கள் விரதம் இருந்த 50 ஆண்கள் ஒன்று சேர்ந்து, அந்த பக்தர் வீட்டில் இருந்து ஒரு கோட்டை நெல் வாங்கி வந்து, அதனை அன்றே குத்தி அந்த அரிசியை இடித்து மாவாக்குகின்றனர்.

பின்னர் மாவில் நீர்விட்டு பிசைந்து உருட்டி தட்டுகின்றனர். தொடர்ந்து காட்டுச் செடிகளின் இலைதழை கொடிகளை ஒன்றாக கட்டி பரப்பி, அதன் மீது இலைகளை பரப்பி, அதில் உருட்டி தட்டிய மாவை அடுக்குகின்றனர். அந்த மாவின் மீது சிறுபயறு, தேங்காய் துருவல் கலந்து பூரணத்தை வைக்கின்றனர். இவ்வாறு மாவையும், பூரணத்தையும் மாறி மாறி அடுக்கிய பின்னர் அவற்றை இலைகளால் மூடி மெகா கொழுக்கட்டை தயாரிக்கின்றனர்.

தொடர்ந்து பூஜை முடித்து வரும் சாமியாடி மெகா கொழுக்கட்டையை தூக்கிச் சென்று, அன்று வெட்டிய உடைமர விறகினால் ஏற்படுத்தப்பட்ட தணலில் போடுகிறார். சுமார் 7 மணி நேரம் தணலில் கொழுக்கட்டை வெந்தவுடன், அதனை பூ சாஸ்தாவுக்கு படைத்து வழிபட்ட பின்னர் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்குகின்றனர்.

அதிசய மரம்

பூ சாஸ்தா கோவிலில் தல விருட்சமாக சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிசய மரம் உள்ளது. அந்த மரத்தின் பெயர்கூட யாருக்கும் தெரியவில்லை. அந்த அதிசய மரமானது ஆண்டில் பங்குனி உத்திரத்தன்று மட்டும் ஒரே ஒரு பூக்களை தோற்றுவிக்கிறது. அந்தப் பூக்களும் அன்றைய தினமே உதிர்ந்து விடுகிறது.

சில ஆண்டுகளில் இருமுறை பங்குனி உத்திரம் வரும்போது, இரவில் உத்திர நட்சத்திரம் வரும்போது மட்டுமே அதிசய மரம் பூக்கின்றது. உத்திர நட்சத்திரம் தொடங்கும்போது பூக்க ஆரம்பித்து, அந்த நட்சத்திரம் முடியும்போது பூக்கள் வாடி விழுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்