கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில், நீராட்டுபுரம் என்ற இடத்தில் இருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். கேரளாவில் பரசுராமரால் உருவாக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். பம்பை ஆற்றின் கரையில் அமைந்த இந்த ஆலயம் பிரபலமான யாத்திரைத் தலமாகவும் விளங்குகிறது. இவ்வாலய அம்மன் இயற்கையோடு இணைந்திருக்கும் தேவி என்பதால், அன்னையின் கருவறைக்கு மேற்கூரை அமைக்கப்படவில்லை. கோவிலில் சக்குளத்துக்காவு அம்மன் தவிர, சிவன், பிள்ளையார், முருகன், மகாவிஷ்ணு, ஐயப்பன், நாகராஜர், யட்சி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னிதிகள் உள்ளன.
இந்த ஆலயத்தின் முக்கியத் திருவிழாவாக, நவம்பர்- டிசம்பர் மாதங்களில் நடைபெறும் பொங்கல் விழா இருக்கிறது. அன்றைய தினம் கோவில் வளாகம் நிரம்பி காணப்படும். நகரின் பிரதான வீதிகள் தோறும் இரு மருங்கிலும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் நடைபெறும் நாரீ பூஜை சிறப்பானது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்வார்கள். ஆலயத்தின் தலைமை அர்ச்சகர், ஒவ்வொரு பெண்ணையும் பீடம் ஒன்றில் அமர வைத்து, தேவியாக பாவித்து பாத பூஜை செய்வார்.