சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு பெறுகிறது.;
சபரிமலை,
மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிப்பது வழக்கம். அதன்படி நேற்று அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டது.
சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
தொடர்ந்து வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது.