குழந்தை பாக்கியம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலைப்பற்றி இங்கே பார்க்கலாம்.

Update: 2022-07-12 05:52 GMT

அயோத்தியை ஆட்சி செய்த தசரத மன்னனுக்கு நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லை. தன் குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி அவர் இத்தலம் வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஈசனை நினைத்து நடத்திய யாகத்தின் பலனாகவே தசரதருக்கு ராமர், பரதன், லட்சுமணன், சத்துக்கணன் ஆகியோர் பிறந்தனர். இதனாலேயே இத்தல இறைவனுக்கு 'புத்திரகாமேட்டீஸ்வரர்' என்று பெயர்.

கோவில் பிரகாரத்தில் அறுபத்து மூவர், சொர்ணவிநாயகர், அம்பிகையுடன் பஞ்சலிங்கம், அஷ்டோத்ர லிங்கம், காளியுடன் வீரத்திரர், வள்ளி-தெய்வானையுடன் முருகர், பாமா-ருக்மணியுடன் கோபாலகிருஷ்ணர், காலபைரவர், சனீஸ்வரர், சூரியன் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

எந்த ஒரு செயலையும் விநாயகரிடம் இருந்து தொடங்கி, அனுமனிடம் முடிக்க வேண்டும் என்பார்கள். அந்த வகையில் இங்கு நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர். பக்தர்கள் ஏதேனும் ஒரு காரியத்தை தொடங்கும்போது, இங்குள்ள விநாயகரை வணங்குகின்றனர். அந்த காரியம் நிறைவடைந்ததும் அனுமனை பிரார்த்திக்கின்றனர்.

குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான பிரதான வழிபாட்டு தலமாக இந்த புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் உள்ளது.

அம்மன் சன்னிதிக்கு எதிரே தசரதருக்கு சன்னிதி இருக்கிறது. இவர் மன்னர் போல்அல்லாமல், முனிவர் போல் காட்சியளிக்கிறார்.

கருவறையில் 9 தலை நாகத்தின் கீழ் சிவபெருமான், லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.

இக்கோவிலின் எதிரே மட்டும் வடக்கில் இருந்து கிழக்காக திரும்பி கமண்டல நதி பாய்கிறது.

ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்தில் இருந்து கொட்டிய நீர், நதியாக பெருக்கெடுத்தது. அதுவே கமண்டல நதி.

மூலவர்: புத்திரகாமேட்டீஸ்வரர்

உற்சவர்: சோமாஸ்கந்தர்

அம்மன்: பெரியநாயகி

தல விருட்சம்: பவளமல்லி

தீர்த்தம்: கமண்டல நதி

ஆரணி பஸ்நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் உள்ளது. வேலூரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து 62 கிலோமீட்டர் தூரத்திலும் ஆரணி இருக்கிறது.

தனி கொடிமரத்துடன் அம்மன் பெரியநாயகிக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

மூலவருக்கு பவுர்ணமி தோறும் விசேஷ பூஜை நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்