மூன்று கோலத்தில் அருளும் முருகப்பெருமான்
வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவிலின் கருவறையில் காட்சித் தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவிலும், அருகிலுள்ள தண்டபாணி துறவறக் கோலத்திலும், உற்சவர் வள்ளி - தெய்வானையுடன் குடும்பஸ்தராகவும் காட்சித் தருகிறார்.
* சேலம் மாவட்டம் தாரமங்கலம் கோவிலில் ஒரு தாமரை மலர் உள்ளது. அதில் இரண்டு அரிய சிறப்புகள் இருக்கின்றன. ஒன்று - அது கருங்கல்லால் ஆனது. இரண்டாவது - அந்தக் கல் தாமரை சுழல்கிறது.
* விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை ஊரிலுள்ள விநாயகர் மிகவும் உயரமானவர். இவருக்குப் பூஜை செய்ய குருக்கள் ஏணி மீது ஏறிப் போகிறார்.
* வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் கோவிலின் கருவறையில் காட்சித் தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவிலும், அருகிலுள்ள தண்டபாணி துறவறக் கோலத்திலும், உற்சவர் வள்ளி - தெய்வானையுடன் குடும்பஸ்தராகவும் காட்சித் தருகிறார்.
* ராமநாதபுரம் வழிவிடும் முருகன் கோவிலில் 'சாயா' என்னும் பெயருடைய மரம் உள்ளது. சனி பகவானின் தாயாரின் பெயர் கொண்ட இம்மரத்தை வழிபட்டால் துன்பங்கள் குறையும்.
* கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரம் தலத்து அம்பாளின் சிரசில், கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று முழுநிலவு பிரதிபலிக்கிறது. இதனால் இந்த அம்பாளுக்கு 'பிறைசூடிய அம்பாள்' என்ற ஒரு பெயரும் உண்டு.
* ஆந்திராவில் சாமல்கோட்டை அருகில் மூன்று பிரதான சாலைகளின் சந்திப்பில் உள்ள 72 அடி உயர சலவைக்கல் ஆஞ்சநேயரின் கண்களும், சில நூறு மைல்களுக்கு அப்பால் பத்ராசல ஆலயத்தில் உள்ள ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் இருக்குமாறு அமைத்திருப்பது வியப்பைத் தருகின்றது.
* ஆழ்வார்குறிச்சியில் வன்னியப்பர்-சிவகாமியம்மன் கோவில் உள்ளது. இது அக்னி பகவான் சாப விமோசனம் பெற்ற தலம். இங்குள்ள நீருற்றுப் பகுதியில் வாயுபகவான் தவம் செய்துள்ளார். இது காளகஸ்திக்கு அடுத்து நாகதோஷம் போக்கும் விசேஷத் தலமாகும்.
* 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரத்தில் (நாகை மாவட்டம்) உள்ள பெருமாளுக்கு அர்த்த ஜாமத்தில் தான் 5 நாழி அரிசி, 3 நாழி பருப்பு, 2 நாழி நெய்யுடன் பொங்கல் செய்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
* தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நவக்கிரகம், லிங்க வடிவில் உள்ளது. கோவிலின் மேற்குப் பக்கம், திருமால் பிரகாரத்தில் உள்ள திருமாளிகைப் பகுதியில் லிங்க நவக்கிரகம் ரூபமாகவும், திருமேனி அரூபமாகவும் உள்ளது. இந்த லிங்க நவக்கிரகத்தைத் தொடர்ந்து சிறிய அளவில் 243 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
* தென்திருப்பதியில் உள்ள நவதிருப்பதிகளுள் ஒன்றான ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் புளிய மரத்தில் பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் மட்டும் பழுக்காது.