அனுமன் வழிபட்ட உலகவிடங்கீஸ்வரர்
பவானியில் அனுமன் வழிபட்ட உலகவிடங்கீஸ்வரர் உலக ஈஸ்வரராக திகழ்கிறார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் உள்ளது, ஒலகடம் என்ற ஊர். இங்கு உலக விடங்கீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.சங்க இலக்கியத்தில் 'உலகடம்' என்று இடம்பெற்றுள்ள இந்த ஊர், கி.பி. 12-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களின் ஆட்சியில் 'உலகவிடங்கம்' என்று வழங்கப்பட்டது. தற்போது இந்த ஊர் 'ஒலகடம்' எனப்படுகிறது. காவிரிக்கரையின் வட பகுதியில் அமைந்திருப்பதால் 'வடகரை உலக விடங்கம்' என்ற பெயரும் இதற்கு உண்டு.
இத்தல இறைவன் 'உலகேஸ்வரர், ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் 'உலக நாயகி' என்பதாகும். 'விடங்கர்' என்றால் 'உளியால் செதுக்கப்படாதவர்' என்று பொருள். இங்கு உள்ள ஈசன் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். உலக விடங்கர் உலக மக்களைக் காக்கும் பெருமைக்குரிய உலக ஈஸ்வரராக இங்கு திகழ்கிறார். ராமாயணத்துடன் தொடர்புடையதாக இந்தத் தலம் புகழப்படுகிறது.
லட்சுமணனின் உயிரைக் காப்பதற்காக இமயமலையில் இருந்து மூலிகைச் செடிகள் நிரம்பிய சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு இந்த வழியாக பறந்து சென்றார், அனுமன்.
இந்த ஆலய இறைவன் இருக்கும் இடத்திற்கு மேலே பறந்தபோது, அனுமனின் கை அசைவற்று நின்று போனது. இதையடுத்து, கீழே சிவபெருமானின் திருத்தலம் இருப்பதை உணர்ந்து கொண்ட அனுமன், கீழே இறங்கி, மூன்று முறை இத்தல இறைவனின் இருப்பிடத்தை வலம் வந்து வழிபட்டு அதன் பிறகு புறப்பட்டுச் சென்றார் என்கிறது தல வரலாறு.