இளைஞர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்...

இளைஞர்களிடம் உரையாடும் போது, நமது பழைய சிந்தனைகளைக் கடந்து, திறந்த மனதோடு இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கு செவி கொடுக்க வேண்டும்.

Update: 2023-10-05 11:59 GMT

ஒரு முறை கப்பர்நாகும் என்ற ஊரில் இருந்து நயீன் என்னும் ஊருக்கு தேவன் இயேசு சென்றார். அப்போது அங்குள்ள மக்கள் இறந்தவர் ஒருவரின் உடலை தூக்கிக்கொண்டு வந்தனர். இறந்து போனவர் ஒரு இளைஞர். தாய்க்கு அவர் ஒரே மகன். கணவனை இழந்த அந்தப்பெண், தனது ஒரே நம்பிக்கையான மகனும் இறந்துவிட்டானே என்பதை எண்ணி அழுது கொண்டு இருந்தார்.

அப்போது இயேசு அவரைப் பார்த்து 'அழாதீர்' என்று சொன்னார். அதன் பிறகு பாடையின் அருகே சென்று, அதைத் தொட்டு 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திடு' என்றார். உடனே இறந்து போன அந்த இளைஞர் எழுந்து உட்கார்ந்து பேசத்தொடங்கினார். அதன் பின் இயேசு அந்த இளைஞனை அவரது தாயிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனை பார்த்த அங்குள்ள மக்கள் ஆச்சரியத்துடன், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றி இருக்கிறார், கடவுள் தம் மக்களைத்தேடி வந்து இருக்கிறார்' என்று கூறினார்கள்.

இந்த அற்புதமான நிகழ்வு லூக்கா நற்செய்தி 7-வது அதிகாரத்தில் இடம் பெற்று இருக்கிறது. நான்கு நற்செய்தியாளர்களுள் லூக்கா மட்டுமே இந்த நிகழ்வைப் பதிவு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பொழுது இந்த இறைவார்த்தைப் பகுதியை சற்று சிந்தித்து பார்ப்போம். இதனை இரண்டு விதங்களில் பார்க்கலாம். ஒன்று, இயேசு அந்தத்தாயின் மீது இரக்கம் கொண்டதால், இளைஞனைத் தொட்டு உயிர் பெறச்செய்தார், என்பது ஒரு கண்ணோட்டம். இரண்டாவது, அந்த இளைஞன் மீது இயேசு கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கை. அந்த இளைஞன் எழுந்து விட்டால், அவனது தாயைப் பார்த்துக்கொள்வான். அவனது தாய்க்கு ஆறுதலாக இருப்பான் என்று முழுமையாக நம்பியதால், மக்கள் சூழ்ந்து இருந்த கூட்டத்தில் இருந்து நகர்ந்து, அந்த இளைஞனை வைத்திருந்த இடத்திற்குத் தேடிச்சென்று உயிர்கொடுத்தார். இவ்வாறு இரண்டு விதங்களிலும் இந்த வேதாகமப் பகுதியை சிந்தித்துப் பார்க்கலாம்.

இப்போது இந்த இறைவார்த்தைப் பகுதியை நம் நிகழ்கால வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்போம். தற்போதைய தொழில்நுட்ப உலகில் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான இடைவெளி பெரிதாகி கொண்டே வருகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதனை சரி செய்ய ஒரு புரிதல் தேவைப்படுகிறது.

அந்த புரிதலை அனைவரும் பெறுவதற்காக, ரோம் நகரில் இருக்கிற போப் ஆண்டவர் பிரான்சிஸ் 2019 -ம் ஆண்டு 'கிறிஸ்து வாழ்கிறார்' என்கிற தலைப்பில் ஒரு மடலை எழுதினார். அதில் அவர், 'இளைஞர்கள் திருச்சபையின் நிகழ்காலம். இளைஞர்களின் புனித நிலமாகிய இதயத்திற்குள் செல்கிற போது உங்கள் காலணிகளைக் கழற்றி விட்டு செல்லுங்கள்' என்று எழுதியுள்ளார்.

இதில் அவர் சொல்கிற வார்த்தைகள் அவர் சுயமாக எழுதியதல்ல, இளைஞர்கள் பலரிடம் நேரடியாக உரையாடி அவர்களது மனநிலையைப் புரிந்து கொண்டும், திருச்சபையின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்தும் இவ்வாறு சொன்னார். இது இளைஞர்கள் மீது கொண்டிருக்கிற அன்பை, நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதுவே இயேசு கொண்டிருந்த பார்வை ஆகும். இந்த பார்வை நாம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

இளைஞர்களிடம் உரையாடும் போது, நமது பழைய சிந்தனைகளைக் கடந்து, திறந்த மனதோடு இளைஞர்களின் புதிய சிந்தனைகளுக்கு செவி கொடுக்க வேண்டும். ஏனெனில் இளைஞர்கள் பலவிதமான மனக்காயங்களோடு தங்கள் வாழ்க்கையை வாழுகின்றனர்.

இதனால் ஏதாவது ஒன்றிற்கு அடிமையாகி, அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். நயீன் ஊர் இளைஞனைத் தேடிச்சென்று புதுவாழ்வு கொடுத்த இயேசுவைப் போல, இளைஞர்களைத் தேடிச்சென்று அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொண்டு வழிகாட்டுகிறபோது, இளைஞர்கள் பெரியவர்கள் உறவில் நல்ல புரிதல் ஏற்படும். இளைஞர் களது வாழ்வில் மாற்றம் நிகழும்.

அவ்வாறு நடக்கிறபோது, 'மிகச்சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்' (மத்தேயு:25:40) என்ற இறைவார்த்தை நமது வாழ்வில் நிதர்சனமாகும்.

அன்பார்ந்தவர்களே! ஒவ்வொரு நாளும் இரவு தூங்கும் முன், இன்று நான் இயேசுவின் பார்வையில் இளைஞர்களையும், மற்ற மக்களையும் பார்த்தேனா? என்ற கேள்வியை கேட்போம். இயேசுவின் பார்வையான அன்போடும், இரக்கத்தோடும், நம்பிக்கையோடும், பொறுமையோடும் இளைஞர்களையும் இந்த சமூகத்தையும் பார்ப்போம்.

இறைவனின் சாயலாக படைக்கப்பட்ட நாம், அனைவரிலும் அனைத்திலும் இறைவனைக் காண்போம். இறைவனின் சாயலாய் வாழ்வோம்!

Tags:    

மேலும் செய்திகள்