பழி சுமத்துவதால் ஏற்படும் கர்மவினை
மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும், அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்து விடும்.;
ஒரு அரசன், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தான். அப்போது வானத்தில் கழுகு ஒன்று, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன்னுடைய கால்களில் பற்றிக்கொண்டு பறந்து சென்றது. அந்த கழுகின் இறுக்கமாக பிடியில் இருந்த பாம்பு, தன்னுடைய வாயில் இருந்து சில துளி விஷத்தைக் கக்கியது. அந்த விஷமானது, அரசன் வைத்திருந்த உணவு பாத்திரத்திற்குள் விழுந்தது. விஷம் விழுந்த உணவை, அறியாது ஒரு அந்தணருக்கு அளித்தான் அரசன். அந்த உணவை வாங்கி சாப்பிட்ட அந்தணர், மறுகணமே இறந்துபோனார். இதைக்கண்ட அரசன் மிகவும் வருத்தம் கொண்டான்.
கர்ம வினைகளுக்கான பலன்களை எழுதும் சித்திரகுப்தனுக்கு, இந்த கர்ம நிகழ்வின் வினையை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த கர்மவினையை கழுகுக்கு அளிப்பதா? அல்லது பாம்பிற்கு அளிப்பதா? அல்லது அரசனுக்கு அளிப்பதா? என்று அவர் பரிதவித்தார். கழுகு அதற்கான இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது. அது அந்தக் கழுகின் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் வாயில் இருந்து விஷம் வழிந்தது. சாவின் பிடியில் இருந்த போது, எதேச்சையாக நடந்த அந்த நிகழ்வு பாம்பின் தவறும் அல்ல. அரசனுக்கு உணவில் பாம்பின் விஷம் கலந்திருப்பது தெரியாது. அவன் அறியாமல் நடந்த நிகழ்வுக்கு அவன் மீதும் குற்றம் சுமத்துவது சரியல்ல. எனவே இந்த பிரச்சினையில் தீர்வு காண முடியாமல் சித்திரகுப்தன் குழம்பினார்.
இதுபற்றி எமதர்மனிடமும் சென்று கேட்டார். சற்றுநேரம் யோசித்த எமதர்மர், "சித்திரகுப்தா, இதற்கான பதில் விரைவில் கிடைக்கும். அதுவரை பொறுமையாக இரு" என்று அறிவுறுத்தினார்.
சில நாட்கள் கழித்து அரசனின் உதவியைப் பெறுவதற்காக சில அந்தணர்கள், அவரது அரண்மனைக்குச் சென்றனர். வழி தெரியாததால் சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் அவர்கள் வழிகேட்டனர்.
அப்போது அந்த பெண்மணி, அவர்களுக்கு சரியாத பாதையைக் கூறியதோடு, "இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன். சற்று எச்சரிக்கையாக இருங்கள்" என்றும் கூறினாள்.
அந்த வார்த்தையைக் கேட்டதும், சித்திரகுப்தன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அந்தணரைக் கொன்ற கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணியையே சேரும் என்று அவர் முடிவு செய்து, அதையே பாவ- புண்ணிய புத்தகத்தில் எழுதவும் செய்தார்.
ஆம்.. மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும், அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்து விடும். அதே நேரம் உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதுமே வந்தடையும். ஆகையால் மற்றவர்களைப் பற்றி பேசும்போது, எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.