வெற்றிகள் உங்களைத் தேடி வரவேண்டுமா?

தன்னம்பிக்கை மிக முக்கியம், அத்துடன் பிரார்த்தனையும் மிக அவசியம். இந்தப் பிரபஞ்சத்தையும், அதில் உள்ள கோடான கோடி உயிரினங்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனிடம் கையேந்துங்கள்.

Update: 2023-02-16 15:30 GMT

எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியும், வெற்றியும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். எந்த ஒரு செயலும் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் வேண்டும், அதற்கான முயற்சிகளையும் நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதர்களில் பலர் இதற்கான எந்த செயலையும் செய்யாமல் மனம் வெறுத்து தவறான முடிவுக்கு செல்வதுண்டு. சிலர் வாழ்க்கைப்போராட்டத்தின் சவால்களையும், நெருக்கடிகளையும் சமாளிக்க முடியாமல் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதும் உண்டு.

தற்கொலைக்கு மட்டுமல்ல, தற்கொலை முயற்சிக்கும் இஸ்லாம் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறது. தற்கொலை செய்து கொண்டவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழவைக்க மறுக்கும் அளவுக்கு பெருங்குற்றமாக அது கருதப்படுகிறது.

"எந்தக் கஷ்டம் வந்தாலும், எத்தனை தோல்விகள் ஏற்பட்டாலும் தற்கொலை என்ற கோழைத்தனமான முடிவை எடுக்காமல், தோல்விகளையே வெற்றியின் படிக்கட்டுகளாக்க எண்ணி முயற்சித்தால் வெற்றி கிடைக்கும்" என்பதே நபி (ஸல்) அவர்களின் போதனையின் அம்சமாகும். கோழைத்தனமாக தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு சுவனத்தின் நற்பெயரும், அல்லாஹ்வுடைய அரு ளும் ஒருபோதும் கிடைக்காது என்றும், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி நரக நெருப்பிற்கு இரையாக வேண்டியது வரும் என்றும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

திருக்குர்ஆன் கூறுகிறது: "உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ள வேண்டாம். திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ் உங்கள் மீது அளப்பரிய கருணை புரிபவனாக இருக்கின்றான்". (திருக்குர்ஆன் 4:29)

"உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள். இன்னும் நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்". (திருக்குர்ஆன் 2:195)

இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள்: "உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். ஒருமுறை அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்து தமது கையை துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை ரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டே இருந்தது". அல்லாஹ், "என் அடியான் தன் விஷயத்தில் அவசரப்பட்டு என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை தடுத்துவிட்டேன்" என்று கூறினான்.

நபிகளார் கூறினார்கள்: "யார் மலையின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் நரக நெருப்பில் தள்ளப்பட்டு மேலிருந்து கீழே என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டே இருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவர் தமது விஷத்தை கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டே இருப்பார். யார் ஒரு கூர்மையான ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ, அவருடைய கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டே இருப்பார்".

நாம் வாழும் இந்த உலகமும், அதிலுள்ள சுகபோக வாழ்க்கையுமே முக்கிய குறிக்கோள்களாக மனித இனத்திற்கு மாறிவிட்டன. இதனால் அன்பும் மனித நேயமும் நம் உள்ளத்திலிருந்து மறைந்து கொண்டே வருகின்றன.

தற்கொலை மிகக் கொடூரமான ஒரு செயல், ஒரு பெரும் குற்றம். இதுபோன்ற ஒரு பெரும் பாவத்தை மறுமை சிந்தனையில்லாத ஒருவரால் மட்டும்தான் செய்ய முடியும். தற்கொலை ஒரு பாவம் என்று மற்ற மதங்கள் கூறும்போது, நிரந்தரமாக நரகத்திற்கு தள்ளும் ஒரு பெரும் குற்றம் அது என்று இஸ்லாம் திட்டவட்டமாக எச்சரிக்கின்றது.

இருளின்றி வெளிச்சம் இல்லை, துக்கம் இன்றி மகிழ்ச்சி இல்லை, பிரச்சினையின்றி வாழ்க்கை இல்லை. மனிதனாகப் பிறந்தால் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பிரச்சினைகளை சந்தித்தாக வேண்டும். பிரச்சினைகள் சிறியதாக இருக்கலாம் அல்லது சிக்கலாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பொறுமையுடனும், மன உறுதியுடனும் முயன்றால் தீர்வு தேட முடியும்.

ஒரு வீழ்ச்சி ஒரு முயற்சியின் முடிவல்ல. மாறாக தொடக்கமேயாகும். நடக்கப் பயிலும் சிறு குழந்தைகளை கவனித்துப்பாருங்கள். பலமுறை விழுந்தாலும், அவர்கள் தங்களின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி இடுவதில்லை. தொடர்ந்து முயல்கிறார்கள் வெற்றியும் காண்கிறார்கள்.

தன்னம்பிக்கை மிக முக்கியம், அத்துடன் பிரார்த்தனையும் மிக அவசியம். இந்தப் பிரபஞ்சத்தையும், அதில் உள்ள கோடான கோடி உயிரினங்களையும் படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் ஏக இறைவனிடம் கையேந்துங்கள். இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் பிரார்த்தனையை கேட்கக் கூடியவனாக, பதில் தருபவனாக, அல்லாஹ் இருக்கின்றான். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பவனும், மன்னிப்பவனும் அவனே. அவனையே வணங்குங்கள், அவனிடமே

உதவியும் தேடுங்கள், உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் தேடிவரும்.

Tags:    

மேலும் செய்திகள்