சிவனின் வாழ்விடம் கயிலாயம்
சைவ நெறிகளைப் பின்பற்றி, சிவபெருமானை வழிபடும் பலருக்கும் கயிலாயமலை எவ்வளவு உன்னதான பிரதேசம் என்பது தெரியும். ஆன்மிக ரீதியாக வழிபாட்டுக்குரிய மலையாக இது பார்க்கப்படுகிறது.
சிவபெருமானின் வசிப்பிடமாக இந்த மலை கருதப்படுகிறது. இமயமலைத் தொடரில் இந்த மலை அமைந்திருக்கிறது. சீனாவின் ஒரு பகுதியாகத் திகழும் திபெத்தில் இருக்கும் இந்த மலை, சுமார் 6,638 மீட்டர், அதாவது 21 ஆயிரத்து 779 அடி உயரம் கொண்டது. இந்த மலையில் இருந்துதான் சிந்து, சட்லெஜ், சுக்ரா, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. இந்த மலை இந்துக்களுக்கு மட்டுமல்லாது, ஜைனர்கள், பவுத்தர்கள் ஆகியோருக்கும் சிறப்புக்குரிய புனித தலமாகத் திகழ்கிறது. கயிலாய மலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். உலகின் கடினமான பாதைகளில் ஒன்றாக இது அறியப்படுகிறது. இந்த யாத்திரை பயணத்தில் கயிலை மலையைச் சுற்றிலும் ஏராளமான தெய்வீகத் தன்மை கொண்ட இடங்களை பக்தர்கள் பார்வையிடுகிறார்கள். அவற்றின் பட்டியலில் சில இங்கே...
ஓம் பர்வதம்
இந்திய - நேபாள எல்லையில் வடகிழக்கு இமயமலையில், 6,191 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது, இந்த ஓம் பர்வதம் மலைச்சிகரம். இந்த மலையின் மீது படர்ந்திருக்கும் பனியானது, 'ஓம்' என்ற எழுத்து வடிவில் பரவியிருக்கும். இதனால் இதனை 'ஓம் பர்வதம்' என்கிறார்கள். இந்திய பகுதியில் இருந்து பார்க்கும் ெபாழுது, இது 'ஓம்' வடிவத்தைக் காட்டுகிறது. மேலும் கயிலாயமலையின் தோற்றத்தைப் போலவே காணப்படுவதால், இதனை 'ஆதி கயிலாயம்' என்றும் அழைக்கிறார்கள். இதன் அருகில் புனிதமான பார்வதி ஏரி, ஜோதிங்க்கோங் ஏரிகள் உள்ளன.
பசுபதிநாதர் கோவில்
காத்மாண்டுவில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, இந்த ஆலயம். சிவபெருமானுக்காக அமைந்த இந்தக் கோவில், தியோபட்டன் நகரின் மையத்தில், பாக்மதி ஆற்றின் கரையில் பிரமாண்டமான முறையில் கட்டப்பட்டிருக்கிறது. கயிலையில் வசித்த சிவன், சில காலம் வந்து தங்கியிருந்த இடமாக இந்த இடம் பார்க்கப்படுகிறது. மான் உருவத்தில் இருந்த ஈசனின் கொம்பை திருமால் தொட்ட போது, அது உடைந்து சிதறியது. அந்த துண்டுகளை சிவலிங்கமாக இங்கே விஷ்ணு பிரதிஷ்டை செய்ததாக வரலாறு.
மானசரோவர் ஏரி
திபெத்தின் புனிதமான ஏரி இது. அதுமட்டுமல்ல உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் உள்ள நன்னீர் ஏரியாகவும் இந்த மானசரோவர் ஏரி கருதப்படுகிறது. திபெத்தின் 'ங்காரி' மாகாணத்தில் அமைந்த இந்த ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 4,590 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. வட்ட வடிவில் அமைந்த மானசரோவர் ஏரியின் சுற்றளவு 88 கிலோமீட்டர் ஆகும். இந்த ஏரியை வலம் வரும்போது, சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களில் கயிலை மலையின் பிரதி பிம்பத்தை காணலாம்.
தீர்த்தபுரி
கயிலாய மலையின் சுற்றுப்பாதையில் அமைந்த ஒரு அற்புதமான மற்றொரு இடம், இந்த 'தீர்த்தபுரி'. சிவபெருமான், பஸ்மாசுரனை அழித்த இடமாக இது கருதப்படுகிறது. இங்கு ஆங்காங்கே வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன. இவற்றில் நீராடுவதால் மன அமைதியும், மனத் தூய்மையும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இங்கிருந்து உற்பத்தியாகும் தீர்த்தபுரி நதி, சட்லெஜ் நதியோடு இணைகிறது. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில், வெந்நீரோடு சேர்ந்து வெண்மையான பொடியும் வருகிறது. இதனை மக்கள் விபூதி பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள்.
சப்திரிஷி குகைகள்
இது கயிலாய மலை யாத்திரையில் முக்கியமான இடமாக கருதப்படுகிறது. மிகக் கடினமான மலையேற்றங்களில் இந்த இடமும் முக்கியத்துவம் பெறுகிறது.
கயிலாய மலை
சிவபெருமான் வசிக்கும் இடமாகவும், சொர்க்கத்திற்கு இணையான பூலோக பகுதியாகவும் இதனை பக்தர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து, மரியாதையுடன் வழிபட்டுச் செல்லும் புனிதமான இடங்களில் இதற்கே முதலிடம்.
ராட்சச ஏரி
கயிலாய மலைக்கு தெற்கே, மானசரோவர் ஏரியின் மேற்கே அமைந்துள்ளது, இந்த ராட்சச தால் ஏரி. இந்த ஏரியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் புனித தீர்த்தமான மானசரோவர் ஏரி உள்ளது. இருப்பினும் இது உவர்ப்பு தன்மை கொண்ட நீரால் ஆனது. கடல் மட்டத்தில் இருந்து 4,575 மீட்டர் உயரத்தில் இந்த ஏரி உள்ளது. கயிலாய மலைக்கு புனிதப் பயணம் செல்பவர்கள் இந்த ஏரியை புனிதமாக கருதுவதில்லை. ஏனெனில் இது ராட்சசர்களின் ஏரி என்று கருதப்படுகிறது. ராவணன், இங்கே தவம் இருந்து சிவபெருமானை வழிபட்டுள்ளான். மானசரோவர் ஏரி வட்ட வடிவில் இருப்பது போல, இந்த ராட்சச தால் ஏரி, பிறை சந்திரன் வடிவில் காணப்படுகிறது. இந்த ஏரியில் இரண்டு பெரிய தீவுகளும், இரண்டு சிறிய தீவுகளும் உள்ளன. இந்த ஏரி, சிவப்பு மற்றும் அடர் நீல நிறத்தில் காட்சி தருகிறது.
ஜல் நாராயணன் விஷ்ணு கோவில்
காத்மாண்டு மாவட்டம் பூதநீலகண்டம் என்ற ஊரில் உள்ள ஆலயம் இது. கயிலாய மலையின் அடிவாரத்தில் இது இருக்கிறது. இங்கே சயன கோலத்தில் நீருக்கு மேல் மிதந்த நிலையில் விஷ்ணு சிலை காணப்படுகிறது. இந்த சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. 5 மீட்டர் நீளம் (16.4 அடி) கொண்ட இந்த சிலை, 13 மீட்டர் (42.65 அடி) நீளமுள்ள, நீர் நிரம்பிய குளத்தின் நடுவே காட்சியளிக்கிறது.
எம துவாரம்
எமதர்மராஜனின் கதவு என்று பொருள் கொண்ட இந்த இடம், கயிலாய மலை- மானசரோவர் ஏரி யாத்திரைப் பாதையில் முக்கியமான ஒரு இடமாகும். கயிலாயமலையை சுற்றி வலம் வரத் தொடங்குவதற்கு முன்பு, இந்த கதவின் வழியாகச் சென்று வர வேண்டும். இந்த வாசலைக் கடந்து செல்பவர், தன்னைச் சுற்றியுள்ள எதிா்மறை சக்திகளில் இருந்தும், முன்ெஜன்ம பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக நம்பிக்கை. எமதா்மன் இந்த கதவை, தனிப்பட்ட முைறயில் காவல் காப்பதாக சொல்லப்படுகிறது. எதிர்மறையான சிந்தனை கொண்ட ஒருவரால், இந்தக் கதவை கடந்து செல்வது கடினம் என்கிறாா்கள்.
கவுரி குண்டம்
இமயமலையின் மீது 6,520 அடி உயரத்தில் 'கவுரி குண்டம்' என்ற ஏரி இருக்கிறது. கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த இடமும், புனித யாத்திரை தலத்தில் ஒன்று. இங்கு வெந்நீர் ஊற்றுகள் காணப்படுகின்றன. பார்வதி தேவி இந்த குண்டத்தில் குளித்தபிறகே சிவபெருமானை மணந்ததாக நம்பிக்கை நிலவுகிறது. இங்கிருந்து 13 கிலோமீட்டரில் கேதார்நாத் கோவில் இருக்கிறது. இந்த கவுரி குண்டம் நீர் நிலைக்கு, 'கருணை ஏரி' என்ற பெயரும் உள்ளது.