பாரிஜாதப் பூவும்.. பாமா- ருக்மணியும்..

பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.

Update: 2022-09-13 13:06 GMT

தேவேந்திரன் ஆட்சி செய்யும் தேவலோகத்தில் இருக்கும் சிறப்புமிக்க மலர்களில் ஒன்று, பாரிஜாதம். இதனை 'பவளமல்லி' என்றும் அழைப்பார்கள். முன் காலத்தில் பவளமல்லிகா என்றொரு தேவதை இருந்தாள். அவளுக்கு சூரியன் மீது காதல். சூரியனுக்காக எதைச் செய்யவும் அவள் தயாராக இருந்தாள். ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலை, சூரியனிடம் வெளிப்படுத்தினாள், பவளமல்லிகா. ஆனால் அதை சூரியன் ஏற்கவில்லை. இதனால் வருந்திய பவளமல்லிகா, சூரியனுடன் கடுமையான கோபம் கொண்டு, "என் உண்மையான காதலை தூக்கி எறிந்த உன் முகத்தில் இனி விழிக்க மாட்டேன்" என்று கூறியபடி, பாரிஜாத மலராக உருமாறிவிட்டதாக ஒரு புராணக் கதை சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் பாரிஜாதம், இரவில் நிலவொளியில் பூத்து நறுமணம் பரப்புகிறது. சூரியன் உதிக்கும் முன்பே, தன்னுடைய பூக்களை உதிர்த்து விடுகிறதாம்.

இந்த மரத்தில் இருந்து கிடைத்த ஒரு மலரை, நாரதர் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்கு வந்தார். அங்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணரிடம், தான் கொண்டு வந்த பாரிஜாத மலரைக் கொடுத்தார், நாரதர். அதனை பெற்றுக்கொண்ட கிருஷ்ணர், அந்த மலரை, தன்னுடைய மனைவியரில் ஒருவரான சத்தியபாமாவிடம் அளித்தார்.

இதைக் கண்ட நாரதர், உடனடியாக அரண்மனையின் மற்றொரு பாகத்தில் இருந்த ருக்மணியிடம் சென்று, சத்தியபாமாவிற்கு தேவலோக மலரான பாரிஜாதத்தை கிருஷ்ணர் கொடுத்த விவரத்தை சொன்னார். இதனால் கோபம் கொண்ட ருக்மணி, அரண்மனை காவலர்கள் மூலமாக, தன்னை வந்து சந்திக்கும்படி கிருஷ்ணருக்கு தகவல் அனுப்பினார். என்னவோ ஏதோ என்று ருக்மணி இருக்கும் இடத்திற்கு வந்த கிருஷ்ணரிடம், தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார், ருக்மணி.

நாரதர் கொண்டு வந்த பாரிஜாத மலரால் தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை எண்ணி வருந்தினார், கிருஷ்ணர். அவர் எவ்வளவு சமாதானம் செய்தும், ருக்மணி கோபம் குறைய வில்லை. 'சத்தியபாமாவிற்கு பாரிஜாத மலரைக் கொடுத்தீர்கள். எனக்கு அந்த மரமே வேண்டும்' என்று கேட்டாள். இதையடுத்து பாரிஜாத மரத்தை இந்திரனிடம் கேட்டார், கிருஷ்ணர். ஆனால் அவன் தரவில்லை. இதனால் போர் புரிந்து பாரிஜாத மரத்தை பூமிக்கு கொண்டு வந்தார், கிருஷ்ணர். பின்னர் அந்த மரத்தை ருக்மணியின் இல்லத்தின் நட்டுவைத்தார்.

ஆனால் அந்த மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் அருகில் இருந்த சத்தியபாமாவின் வீட்டிற்குள்தான் உதிர்ந்து விழுந்தன. ஏனெனில், ருக்மணி கிருஷ்ணரிடம் கேட்டது, பாரிஜாத மரத்தைத்தான். அதை அவருக்கு கொடுத்து விட்டார், கிருஷ்ணர். ஆனால் அதில் இருந்து ஒரு பூக்கள் கூட ருக்மணிக்கு கிடைக்கவில்லை. அனைத்தும் சத்தியபாமாவிற்கே கிடைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்