ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குருவாயூர் பார்த்தசாரதிப் பெருமாள்

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் என்றதும் நம் நினைவுக்கு வருவது, அங்குள்ள குருவாயூரப்பன் ஆலயம்தான். ஆனால் அதே குருவாயூரில், அதே குருவாயூரப்பனின் அம்சமாக இன்னொரு பெருமாள் கோவிலும் இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.

Update: 2023-07-21 14:55 GMT

குருவாயூரில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில்தான் அது. இந்த ஆலயத்தில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள், குருவாயூரப்பனின் அம்சமாகவே வீற்றிருக்கிறார் என்பது சிறப்புக்குரியது. மேலும் இந்த விக்கிரகத்தை இங்கே பிரதிஷ்டை செய்தவர், சிவபெருமானின் அம்சமாக கருதப்படும் ஆதிசங்கரர் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த ஆலயம் உருவான விதம் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஒரு முறை நாரத முனிவரும், ஆதிசங்கரரும் ஆகாய மார்க்கமாக பூலோகத்தை கவனித்தபடி வலம் வந்தனர். அப்போது குருவாயூரின் வடக்குப் பகுதியின் மேல் சென்றபோது, நாரதர் மட்டும் குருவாயூரப்பனை தரிசிக்க பூமியில் இறங்கினார். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியானது, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் ஏற்று, குருவாயூர் கோபாலகிருஷ்ணனை தரிசிக்க வரும் சிறப்புமிக்க நாள் ஆகும். அதேபோல் 18 நாட்கள் நடைபெற்ற மகாபார யுத்தத்தில் அர்ச்சுன னுக்கு, கிருஷ்ணர் கீதையை உபதேசித்த நாளும் இந்த நாள்தான். அப்படிப்பட்ட சிறப்புமிக்க நாளில்தான், நாரதர் குருவாயூரப்பனை தரிசிக்க வந்திருந்தார். அவர் குருவாயூரப்பனை தரிசிக்க கோவிலுக்குள் நுழையும் தருணத்தில், கோவில் வாசலில் நிழலாடுவதைக் கண்டு திரும்பிப் பார்த்தார். அங்கு ஆதிசங்கரர் நின்று கொண்டிருந்தார். வியப்புடன் அவரைப் பார்த்த நாரதரிடம், 'தன்னை ஏதோ ஒரு சக்தி கீழே இழுத்ததை உணர்ந்தேன்' என்று சொன்னார்.

அந்த சமயத்தில் குருவாயூரப்பன் ஆலயத்தில் சீவேலி ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அந்த ஊர்வலம் சரியாக, நாரதரும், ஆதிசங்கரரும் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து நின்றது. அதனை நாரதரோடு இணைந்து ஆதிசங்கரரும் வணங்கினார். பின்னர் அரியும், அரனும் ஒன்று என்று உலகிற்கு உணர்த்தவே, குருவாயூரப்பன் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருப்பதாக கருதிய இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் ஆதிசங்கரரின் விருப்பதிற்கு ஏற்ப, குருவாயூரப்பன் அவருக்கு பார்த்தசாரதியின் ரூபத்தில் தரிசனம் தந்தார். தான் கண்ட அந்த வடிவத்தை, அனைத்து பக்தர்களும் வணங்க வேண்டும் என்று ஆதிசங்கரா் விரும்பினார். பின்னர் நாரதரின் வழிகாட்டுதல்படி, கங்கையில் இருந்து பார்த்தசாரதி விக்கிரகம் ஒன்றை எடுத்து வந்து குருவாயூரில் பிரதிஷ்டை செய்தார்.

இந்த பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலின் கர்ப்பக்கிரகம், கருங்கல்லில் தேர் வடிவத்தில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்பபக் கிரகத்தின் முன் பகுதியின் இரண்டு பக்கமும் வெள்ளை நிற குதிரைகள், தேரை இழுத்துச் செல்வதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை வடிவமைத்தவர்கள், காஞ்சிபுரத்தில் இருந்து சென்ற சிற்பிகள் என்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

இவ்வாலய கருவறையில் வீற்றிருக்கும் பார்த்தசாரதிப் பெருமாள், நின்ற திருக்கோலத்தில் கையில் பாஞ்சஜன்யம் மற்றும் சாட்டையுடன் சிரித்த முகத்தோடு அருள்பாலிக்கிறார். மகாபாரத காலத்தில் குந்திதேவியார் பூஜித்த திருவடிவம் இது என்பது இவ்வாலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

இவ்வாலயத்தில் கணபதி சன்னிதி இருக்கிறது. இங்கு தினமும் அதிகாலையில் கணபதி ஹோமம் செய்யப்படுகிறது. தென்கிழக்கில் நவக்கிரக சன்னிதி உள்ளது. தென்மேற்கில், ஐயப்பனுக்கு சன்னிதி இருக்கிறது. இவருக்கு நெய் அபிஷேகம் மற்றும் நீராஞ்சன வழிபாடு இங்கு பிரசித்தம். இவ்வாலயத்திற்கு அடிகோலிய ஆதிசங்கரருக்கு வடமேற்கில் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. சங்கரஜெயந்தி இங்கு மிகச் சிறப்பாக நடைபெறும்.

Tags:    

மேலும் செய்திகள்