கருணை மிகுந்த காவல் தெய்வம் கட்டேரி பெருமாள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் காயாமொழி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற கட்டேரி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கட்டேரி பெருமாள் சுவாமி அரிச்சந்திரனின் மகனான லோகிதாசன் ஆவார்.
சத்தியம் தவறாத காரணத்தால் அரசனாக இருந்த அரிச்சந்திரன், பல துன்பங்களை அனுபவித்தான். ராஜ்ஜியத்தை இழந்து, மனைவி, பிள்ளையை பிரிந்து சுடுகாட்டில் பணியாற்றினான். அவனது மனைவி சந்திரமதியும், மகன் லோகதாசனும் காலகண்ட அய்யர் என்பவர் வீட்டில் அடிமைகளாக இருந்தனர். ஒரு நாள், தர்ப்பை பறிக்க காட்டுக்குச் சென்ற லோகதாசன் பாம்பு தீண்டி இறந்தான். இதையறிந்த சந்திரமதி அழுது புரண்டாள். பின் மகனை எரியூட்ட சுடுகாட்டிற்கு தன் தோளில் சுமந்து சென்றாள். சுடுகாட்டில் ஓரிடத்தில் மகனை கிடத்தி, அவன் மீது அங்குகிடந்த காய்ந்த சறுகுகளையும், மரக்குச்சிகளையும் போட்டு எரியூட்ட ஆயத்தமானாள். இதை தூரத்தில் இருந்த சுடலையன் வீரபாகு "அங்கு என்ன நடக்கிறது என பார்த்து வா" என்று அரிச்சந்திரனிடம் கூறினான். அருகில் வந்த அரிச்சந்திரன், "எங்களுக்கு சேர வேண்டிய கூலியை கொடுக்காமல் பிணத்தை எரிப்பது யார்?" எனக் கேட்டான். தன் குழந்தை இறந்த கதையையும் தான் ஒரு அய்யர் வீட்டில் அடிமை வேலை பார்ப்பதாகவும் அதனால் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறுகிறாள். இதை கேட்ட அரிச்சந்திரன் "நீ பொய் சொல்கிறாய். நீ அடிமையாக இருந்தால் உன் கழுத்தில் தங்கத்தாலி எப்படி வந்தது? தாலியை விற்றாவது எங்கள் கூலியை கொடு" என்கிறான்.
"தேவலோகத்தில் உள்ளவர்களாலேயே பார்க்க முடியாத என் தாலி ஒரு புலையன் கண்ணுக்கு தெரிந்து விட்டதே" எனக் கூறி அழுதாள் சந்திரமதி. 'அப்படியானால் வந்திருப்பது தன் மனைவி சந்திரமதியா?, இறந்து கிடப்பவன் லோகிதாசனா?' என அதிர்ச்சி அடைகிறான் அரிச்சந்திரன். புலையனாக ஊழியம் பார்ப்பவன் அரிச்சந்திரன்தான் என்பதை சந்திரமதியும் தெரிந்துகொள்கிறாள். "இப்போதாவது மகனை எரித்து கொடுங்கள்" என்று சந்திரமதி கணவரிடம் கேட்கிறாள். அப்போதும் அரிச்சந்திரன் "எனக்கு கொடுக்க வேண்டிய வாய்க்கரிசியை வேண்டுமானால் கொடுக்காமல் இரு. ஆனால் என் எஜமானருக்கு சேர வேண்டிய கால்பணத்தையும், முழத்துண்டையும் கொடுத்து விடு" என்றான். உடனே தன் சேலையில் இருந்து ஒரு பகுதியை கிழித்து முழத்துண்டுக்காக கொடுத்தாள். கால் பணம் கொடுக்க என்னிடம் வழி இல்லை என்றாள். அதற்கு அரிச்சந்திரன் "நீ வேலை செய்யும் வீட்டில் இருந்து வாங்கி வா" என்றான். சந்திரமதி புறப்பட்டு சென்றாள். ஆனால் காலகண்ட அய்யரின் மனைவி கால் பணம் கொடுக்க மறுத்து விட்டாள். மடிப்பிச்சை கேட்டாவது கால் பணத்தை திரட்ட முடிவு செய்தாள். திரும்பி வரும் வழியில் காட்டுப்பகுதியில் குழந்தை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து லோகிதாசனைதான் நாயோ நரியோ இங்கு வந்து போட்டதோ? என பதறியபடி அருகே சென்று பார்த்தாள். அந்நாட்டு மன்னனின் குழந்தை காணாமல் போனதால் அதை தேடி பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். இறந்த குழந்தையின் அருகில் சந்திரமதி இருப்பதை பார்த்து அவள்தான் குழந்தையை கொன்ற கொலைக்காரி என நினைத்து அரசனிடம் கூட்டிச் செல்கிறார்கள்.
பிள்ளை இறந்த துக்கத்தில் இருந்த மன்னன், எதையும் விசாரிக்காமல் சந்திரமதிக்கு மரண தண்டனை விதித்தான். மரண தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு சுடுகாட்டு காவல்காரன் வீரபாகுவிற்கு வருகிறது. வீரபாகு, அரிச்சந்திரனை அழைத்து சந்திரமதியின் கழுத்தை வாளால் வெட்டி மரண தண்டனையை நிறைவேற்ற சொல்கிறான். சந்திரமதி குற்றமற்றவள் என தெரிந்தும் எஜமானரின் கட்டளையை நிறைவேற்ற வாளை ஓங்கி சந்திரமதியின் கழுத்தில் போடுகிறான் அரிச்சந்திரன். திடீரென்று அவள் கழுத்தில் விழுந்த வாள் பூமாலையாகிறது.
சிவபெருமான் அங்கு தோன்றி, இறந்து கிடந்த லோகிதாசனுக்கு உயிர் கொடுக்கிறார். கட்டையில் பிணமாக கிடந்ததால் 'கட்டையேறு பெருமாள்' என்றும், 'கட்டேரி பெருமாள்' என்றும் அழைக்கப்படுவாய் என்றும், உன்னை வணங்கும் மக்களுக்கு காத்து நிற்பாய் என்று பல்வேறு வரங்களை வழங்கினார். அதன்படி தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணை மிகுந்த காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார் கட்டேரி பெருமாள்.இந்தக் கோவிலில் உள்ள கட்டேரி பெருமாளை வணங்கி வழிபட்டால், கருணையோடு வேண்டிய வரங்களை வழங்குவார் என்பது நம்பிக்கையாக உள்ளது.