வழிபடுவதை உணர்த்தும் சிற்பம்
ஆலயத்திற்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும், அவர்கள் ஆலயத்தில் உள்ள கொடிமரத்தின் முன்பாக தரையில் விழுந்து வணங்குவார்கள்.
கொடிமரத்தின் முன்பாக தரையில் விழுந்து வணங்கும் பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' என்ற ரீதியிலும், ஆண்கள் 'அஷ்டாங்க நமஸ்காரம்' என்ற வகையிலும் வழிபட வேண்டும் என்பது நியதி.
'பஞ்சாங்க நமஸ்காரம்' என்பது தலை, கைகள், முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்களும் தரையில் படும்படி வணங்குவதாகும்.
'அஷ்டாங்க நமஸ்காரம்' என்பது தலை, காதுகள், கைகள், தோள்கள், கால்கள் ஆகிய எட்டு அங்கங்களும் தரையில் படுமாறு விழுந்து வணங்குவதாகும்.
இதனை விளக்கும் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தைத்தான் நீங்கள் இங்கே பார்க்கிறீர்கள். இந்த சிற்பமானது, திருநெல்வேலி மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள திருவாலீஸ்வரம் என்ற இடத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோவிலில் அமைந்திருக்கிறது.