இந்தியாவில் அமைந்த கலைமகளின் கலைக்கோவில்கள்

கல்விக்கு அதிபதியாக அறியப்படும் சரஸ்வதி தேவி, பிரம்மனின் படைப்புக்குரிய சக்தியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தேவிக்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Update: 2023-04-18 13:47 GMT

காஷ்மீர்

காஷ்மீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கில் உள்ளது, சாரதா பீடம் என்ற ஆலயம். இது சரஸ்வதிக்காக அமைக்கப்பட்ட மிகப் பழமையான ஆலயம் என்று சொல்லப்படுகிறது. தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படும் இந்த ஆலயம், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு நான்கு திசைகளிலும் நான்கு வாசல்கள் அமைந்திருக்கின்றன. இதில் கிழக்கு, வடக்கு, மேற்கு திசை வாசல்களை மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தெற்கு பகுதி வாசல் வழியாக யாரும் அனுமதிக்கப்படுவதில்லையாம். ஆனால் ஆதிசங்கரர், இந்த ஆலயத்திற்கு வந்தபோது, தெற்கு வாசல் வழியாகத்தான் கோவிலுக்குள் நுழைந்திருக்கிறார். தெற்கு வாசல் வழியாக இவ்வாலயத்திற்குள் நுழைந்தவர் அவர் மட்டும்தான் என்கிறார்கள்.

சிருங்கேரி

கர்நாடகா மாநிலம் சிருங்கேரி என்ற இடத்தில் உள்ளது சாரதாதேவி பீடம். துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்த இந்த பீடம், 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுப்பட்டிருக்கிறது. இங்குள்ள சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக, அதாவது பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து, பக்தர்கள் வேண்டியதை வழங்கும் தெய்வமாக அருள்கிறார். ஆரம்ப காலத்தில் சந்தன மரத்தால் ஆன விக்கிரகமாக இத்தல சரஸ்வதி சிலை இருந்திருக்கிறது. அதன்பின்னர் வித்யாரண்டிலு என்பவர், இந்த விக்கிரகத்தை தங்கமாக செய்து வைத்ததாக கோவில் வரலாறு தெரி

விக்கிறது.

பாசர்

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கோதாவரி நதிக்கரையில் இருக்கிறது, பாசர் என்ற ஊர். இங்கு ஞானசரஸ்வதி என்ற பெயரில் ஞானத்தை வழங்கும் தெய்வமாக சரஸ்வதி தேவி கோவில் கொண்டுள்ளார். குருஷேத்திர போர் நிறைவடைந்ததும், வேத வியாசர் அமைதியைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார். இங்கு கோதாவரி நதிக்கரையில் அமர்ந்து தியானம் செய்தார். இதனால் அது 'வியாசபுரி' என்றும் அழைக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் அருளும் சரஸ்வதி தேவி, தனது கையில் வீணையை ஏந்தியபடி காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் 'அட்சரபாயசம்' என்ற பிரசித்திப் பெற்ற நிகழ்வு அரங்கேறுகிறது. குழந்தைகளை கல்வி உலகிற்குள் நுழைக்கும் நிகழ்வு இதுவாகும். வசந்த பஞ்சமியில் பக்தர்கள், தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வருகிறார்கள். இந்த ஆலயத்தில் இருந்து சிறிது தூரத்தில், மகாலட்சுமி மற்றும் மகா காளி ஆகியோருக்கு சன்னிதிகள் இருக்கின்றன.

பனச்சிக்காடு

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ளது, பனச்சிக்காடு. இங்குள்ள விஷ்ணு கோவிலில், 'தட்சிண மூகாம்பிகா' என்று அழைக்கப்படும் சரஸ்வதி தேவி முக்கிய தெய்வமாக அருள்கிறார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவ்வாலயத்தில் நடைபெறும் சரஸ்வதி பூஜை, முக்கியமான திருவிழாவாகவும் இருக்கிறது. பழமையான வரலாறு ெகாண்ட ஆலயமாக இது திகழ்கிறது. இந்த ஆலயத்திலும் குழந்தை

களுக்கு, எழுத்து அறிவித்தல் நிகழ்வு பிரசித்திப் பெற்றதாக உள்ளது.

கூத்தனூர்

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, கூத்தனூர் சரஸ்வதி கோவில். கல் விக்கிரகமாக அமைந்த இந்த தேவிக்கு, நான்கு கரங்கள் உள்ளன. இந்த கரங்களில் ஜெபமாலை, தண்ணீர் குடம், சின்முத்திரை மற்றும் ஓலைச்

சுவடி தாங்கியிருக்கிறார். 12-ம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான ஒட்டக்கூத்தர், தினமும் சரஸ்வதியை தரிசனம் செய்து வந்தார். கலைவாணியின் அருளால் அவர், சிறந்த கவிஞராக புகழ்பெற்று விளங்கினார். ஒட்டக்கூத்தருக்காக சோழர் ஆட்சியில் இந்த சரஸ்வதி ஆலயம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆலய வாசலில் ஒட்டக்கூத்தர் கல் சிலையும் இருக்கிறது. இத்தல சரஸ்வதி தேவிக்கு வெள்ளை வஸ்திரமும், தாமரை மலர்களும் சமர்ப்பித்து வணங்குகிறார்கள்.

வாரங்கல்

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் அமைந்துள்ளது, வித்யா சரஸ்வதி கோவில். இங்கு சரஸ்வதி தேவியானவர், ஹம்சவாகினியாக அருள்பாலிக்கிறார். காஞ்சி சங்கர மடம் இந்தக் கோவிலை பராமரிக்கிறது. பண்டைய வேதங்கள் கற்பதற்காக, இந்த ஆலயத்தின் அருகில் 300 மாணவர்கள் தங்கிப் பயிலும் வகையில் மடம் ஒன்று உள்ளது. வசந்த பஞ்சமி மற்றும் சாரதா நவராத்திரியின் போது இந்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆலயத்தின் அருகாமையில், லட்சுமி கணபதி கோவில், சனீஸ்வர பகவான் கோவில், சிவன் கோவில் போன்றவை இருக்கின்றன.

புஷ்கர்

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் சரஸ்வதி கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கு வரும் பக்தர்கள் கலை மற்றும் அறிவின் தெய்வமான சரஸ்வதி அம்மனை பிரார்த்தனை செய்கிறார்கள். இந்தக் கோவில் ஒரு தனித்துவமான மற்றும் அழகான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்தக் கோவில், கட்டிட அழகுக்கு புகழ் பெற்றது.

பிலானி

ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பிலானி வளாகத்தில் உள்ள பிரபல பிர்லா மந்திர், சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 7 அடி (2.1 மீ) உயரம் அடித்

தளத்தில் கட்டப்பட்ட வெள்ளை பளிங்கு கோவில் இது. ஆலயத்தைத் தாங்கும் விதமாக ஆலயம் முழுவதும் 70 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், பிரகாரம், கர்ப்பக்கிரகம் ஆகிய பகுதிகளாக ஆலயம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் வெளிப்புறம் முனிவர்கள், விஞ்ஞானிகள், தத்துவ ஞானிகள் போன்றவர்களின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அறிவியல் உலகத்துடனான ஆன்மிக உலகத்தின் பிணைப்பை இந்த ஆலயம் காட்டுகிறது

Tags:    

மேலும் செய்திகள்