உண்மையான நோன்பு நாள்
மனிதன் கடவுளிடமிருந்து நன்மைகளை பெற்றுக்கொள்ள நோன்பு நாளை ஏற்படுத்தினான். ஆனால் இந்த நாற்பது நாள் நோன்பு வித்தியாசமானது. ‘புனித வெள்ளி’ வருவதற்கு நாற்பது நாளுக்கு முன் நோன்பு ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை யூதாஸ் முத்தத்தினால் காட்டிக்கொடுத்தபோது அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: "நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்". (மத்தேயு 26:48)
அவர்கள் இயேசுவை பிடித்து பிலாத்துக்கு முன்பாக கொண்டுபோய் நிறுத்தினார்கள். பிலாத்து விசாரித்து இயேசுவின் மேல் ஒரு குற்றமும் கண்டுபிடிக்க முடியவில்லை. எப்படியாவது விடுதலையாக்க நினைக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: "நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள்". (மத்தேயு 27:19)
ஆனால் ஜனங்களோ, 'இயேசுவை சிலுவையில் அறையும்' என்று கூக்குரல் இட்டபோது, கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: "இந்த நீதிமானுடைய ரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்றான். (மத்தேயு 27:24)
ரோம போர்ச்சேவகர்கள் இயேசுவை சாட்டையால் அடித்தனர். சிரசில் முள் கிரீடம் சூட்டினர். கைகளிலும் கால்களிலும் ஆணியால் அறைந்தார்கள். மனிதனோ அனேக குற்றம் செய்து பணத்தினாலும், பலத்தினாலும் அவை மறைக்கப்படும்போது, எந்த குற்றமும் செய்யாதவருக்கு கிடைத்த தண்டனையை பாருங்கள். அன்று ஜனங்கள் இயேசுவிடமிருந்து அப்பம் புசித்தார்கள், அற்புதங்களையும், அடையாளங்களையும் பெற்றுக்கொண்டு சிலுவையில் அறைய ஒப்புக்கொடுத்தது போல், வெளியில் நல்லவன் என்று காண்பிக்க சிலர் நாற்பதுநாள் நோன்பு இருக்கிறார்கள்.
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது. ஆனால், சிலரது சிந்தை எப்படி இருக்கிறது?. மனதிற்குள் பாவ எண்ணங்களை விதையைப்போல் விதைத்து தண்ணீர் ஊற்றி வளர்கிறார்கள். இதுவா நோன்பு. சிலர் நாற்பது நாளுக்கு பின் பார்த்துக் கொள்ளலாம் என்றும், யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும் தங்கள் பாவத்தை மறைத்து வைக்கிறார்கள்.
தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே. (ஆபகூக் 1:13 )
அதை அறியாமல் நோன்பு என்ற பெயரில் இறைச்சி, மீன் சாப்பிடமாட்டார்கள். சாப்பிட்டால் பாவம். ஆனால் மது குடிப்பதும், புகைக்கும், போதைக்கும் அடிமைப்பட்டிருப்பதும் பாவம் என்று ஏனோ தெரிவதில்லை.
வருடத்திற்கு ஒருமுறை புனிதவெள்ளி அன்று கஞ்சி குடிப்பது நோன்பு என்று சொல்கிறவர்கள். ஒவ்வொரு நாளும் கஞ்சிக்கே வழியில்லாமல் கலங்கி நிற்கும் ஏழையின் இருதயத்தை ஏனோ காணமுடிவதில்லை.
நோன்பு என்ற பெயரில் சரீரத்தை ஒடுக்கும் மனிதா, நீ ஏன் உன் மனதை அடக்க மறந்துவிட்டாய். அன்றும் ஜனங்கள் இப்படி செய்துவிட்டு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுவைக் கண்டு அழுதார்கள்.
இயேசு அவர்களைப்பார்த்து சொன்னார்: "நீங்கள் எனக்காக அழவேண்டாம். உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்". அப்படி அழுதிருந்தால் இன்று நாமும் நம் பிள்ளைகளும் பாவத்திலிருந்து மீட்பு பெற்றிருப்போம்.
"நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் (நோன்பிருப்பதை) உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". (மத்தேயு 6:16)
"நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் (நோன்பு) மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு". (மத்தேயு 6:17)
"அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்". (மத்தேயு 6:18)
ஒவ்வொரு வருடமும் பலனில்லாமல் நோன்பிருப்பதை விட உன் எண்ணத்தால் இயேசுவின் சிரசில் முள்முடி சூடாதே. உன் தீய செயல்களினால் அவர் கைகளில் ஆணி அடிக்காதே. உன் பாவ நடவடிக்கையினால் அவர் கால்களில் ஆணியால் அறையாதே. மறுபடியும் அவர் விலாவிலே ஈட்டியால் குத்தாதே. இயேசுவைபோல் நன்மை செய்.
"அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்". (அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38)
அவர் பாவத்தை வெறுத்தார், பாவியை நேசித்தார்.
விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணை கல்லெறிந்து கொல்லும்படியாக இயேசுவினிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களிடம் 'உங்களில் பாவமில்லாதவன் இவள் மேல் முதலாவது கல்லெறியட்டும்' என்றார். அவர்கள் மனதில் குற்ற உணர்வு உண்டாகி கல்லெறியாமல் போய்விட்டார்கள். இயேசு அவளை பார்த்து, 'யாரும் உன்னை தண்டிக்கவில்லையா?' என்றார். அதற்கு அவள்: 'இல்லை, ஆண்டவரே', என்றாள். இயேசு அவளை நோக்கி: 'நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப்பாவஞ்செய்யாதே' என்றார். (யோவான் 8:11)
தன்னைபோல் பிறனையும் நேசி. தீமைக்கு தீமை சரிக்கெட்டாதே. "மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார். (மத்தேயு 25:40)
இதுதான் கடவுள் விரும்பும் உண்மையான நோன்பு.