சமயபுரம் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி சில தகவல்களை அறிந்து கொள்வோம்.
வசுதேவர்-தேவகி தம்பதியரின் 8-வது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தார். அவரை நந்தகோபர்- யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்தார் வசுதேவர். அந்தக் குழந்தையை கம்சன் கொல்ல முயன்றபோது, அது வானில் பறந்து மறைந்தது. அந்தக் குழந்தையே சமயபுரம் மாரியம்மன் என்கிறது தலவரலாறு.
இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன், சுகாசினியாகக் காட்சி தருகிறாள். தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் இருக்கிறது. நெற்றி நிறைய திருநீறு, குங்குமம் அணிந்துள்ளாள்.
அன்னை இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்டு அமர்ந்துள்ளாள். பாதத்தில் மூன்று அசுரர்கள் தலை காணப்படுகின்றன. இவை ஆணவம், கன்மம், மாயைக் குறிக்கின்றன.
எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி அணிந்துள்ளாள்.
இங்கு ஒரே சன்னிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அம்மனின் உக்கிரத்தை தணிக்க காஞ்சி பெரியவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. அவர் கூறியபடி ஆலயத்திற்கு வலதுபுறம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன் மூலம் அம்மனின் மூல விக்கிரகத்தில் இருந்த கோரை பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக அன்னை மாற்றப்பட்டாள்.
அம்மனின் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டது. தங்கத்தின் எடை 71 கிலோ 127 கிராம். செம்பின் எடை 3 கிலோ 288 கிராம். இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.
ரூபாய் 20 லட்சம் செலவில் தங்க ரதம் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது. காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சமயபுரம் மாரியம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து, பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.
பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமை இந்த விரதம் தொடங்குகிறது. விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட்களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டுமே நைவேத்தியம் செய்யப்படும். சாயரட்சை பூஜையின் போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவையே அந்த நைவேத்தியம்.
சமயபுரத்தாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு - மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும், தெற்கு - வடக்காக 150 அடி அகலத்துடனும் ஆலயம் அமைந்துள்ளது.
சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனது. எனவே இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறும். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன.
கொள்ளிடம் தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. தைப்பூசத்தின் போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் இருக்கிறது. இதை ‘தீர்த்தவாரி விழா’ என்பார்கள்.