உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அரசியல் தீர்வுதான் சரியான வழி: ரஷியா, சீனா கருத்து

உக்ரைன் போர் மற்றும் நெருக்கடிக்கு அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று இரு தரப்பும் நம்புவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறினார்.

Update: 2024-05-17 06:19 GMT

பீஜிங்:

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கிடையே சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினர். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிகள் குறித்தும் விரிவாக பேசினர்.

நேற்று நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு புதின், ஜி ஜின்பிங் இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், உக்ரைன் நெருக்கடிக்கு நிலையான தீர்வு காண வேண்டுமானால், அதன் மூல காரணங்களை அகற்றுவது அவசியம் என்று இரு தரப்பும் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுடனான உறவுகளை முடிவுக்கு கொண்டுவர சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவை மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளது. அதாவது, சீனா மற்றும் ரஷியா இடையிலான உறவுகள் எந்தவொரு மூன்றாம் நாடுகளையும் குறிவைக்கவில்லை என்றும், இரு நாடுகளின் ஒத்துழைப்பை தடுக்கும் முயற்சியை எதிர்கொள்வோம் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைன் நெருக்கடிக்கும் அரசியல் தீர்வுதான் சரியான வழி என்று இரு தரப்பும் நம்புவதாக சீன அதிபர் கூறினார். அமைதியான வழிகளில் நிலையான மற்றும் நியாயமான தீர்வை விரும்புவதாகவும், அமைதி பேச்சுவார்த்தைகள் மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளின் நலன்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்