அமெரிக்காவில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணி

சமீபத்தில் தாக்குதலுக்குள்ளான நாவலாசிரியர் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவாக, நியூயார்க்கில் பிர்ம்மாண்ட பேரணி நடைபெற்றது.

Update: 2022-08-20 16:50 GMT

நியூயார்க்,

இந்தியாவின் மும்பையில் பிறந்த பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, கடந்த 12-ந்தேதி அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நடந்த இலக்கிய கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது திடீரென கூட்டத்திலிருந்து பாய்ந்த இளைஞர் ஒருவர் சல்மான் ருஷ்டியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, கண், நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சல்மான் ருஷ்டிக்கு பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். பின்னர் டாக்டர்களின் தீவிர சிகிச்சையில் உடல் நலம் தேறியதை தொடர்ந்து, அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. எனினும் அவர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

இந்த நிலையில் சல்மான் ருஷ்டிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேற்று முன்தினம் நியூயார்க்கில் உள்ள புகழ் பெற்ற நியூயார்க் பொது நூலகத்தின் அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர்.

"சல்மானை ஆதரிப்போம்: எழுத்துரிமையை பாதுகாப்போம்" என்கிற பெயரில் நடந்த இந்த பேரணியில் எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சல்மானின் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் சல்மானின் புகைப்படங்கள் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்கள் அடங்கிய பாதகைகளை கைகளில் வைத்திருந்ததோடு, பிற்போக்குவாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்