அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்.. இதை பார்த்து உலகம் சும்மா இருக்காது: நெதன்யாகு ஆவேசம்
போராட்டம் தொடங்கிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம்தேதி இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. 6 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்த போரில், காசாவில் 34 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போர் உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் வலிமையான நட்பு நாடான அமெரிக்காவில் உள்ள மிகவும் பிரபலமான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், காசா போருக்கு எதிரான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளன. போர்நிறுத்தம், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, போராட்டம் நடத்தும் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
காசாவில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெற்ற போராட்டங்களில் ஏராளமான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் தொடங்கிய கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இது யூத எதிர்ப்பு போராட்டம் என யூத மாணவர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்த போராட்டங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், "இது பயங்கரமானது. யூத எதிர்ப்பு கும்பல் முன்னணி பல்கலைக்கழகங்களை கைப்பற்றியுள்ளன. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள யூத எதிர்ப்பானது, 1930களில் ஜெர்மன் பல்கலைக்கழகங்களில் நடந்ததை நினைவூட்டுகிறது. இதை பார்த்துக்கொண்டு உலகம் சும்மா இருக்காது" என குறிப்பிட்டுள்ளார்.