'என் ஆடைகளை விற்று மக்களுக்கு கோதுமை மாவு வழங்குவேன்' - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
தனது ஆடைகளை விற்று மக்களுக்கு கோதுமை மாவு வழங்குவேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானில் கோதுமை மாவின் விலை உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 24 மணி நேரத்தில் கோதுமை மாவு விலையை குறைக்காவிட்டால் எனது ஆடைகளை விற்று மக்களுக்கு மலிவான விலையில் கோதுமை மாவு வழங்குவேன் என அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
கைபர் பக்துங்வா மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இதுவரை இல்லாத அளவுக்கு பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை நாட்டுக்கு பரிசாக அளித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "நான் என் உயிரைக் கொடுத்தாவது, இந்த நாட்டை செழிப்பு மற்றும் வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்வேன் என்பதை உங்கள் முன் ஆணித்தரமாக அறிவிக்கிறேன்" என்றார்.