"புதிய ராணுவ தளபதியை நியமிப்பதில் எந்த அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை" - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானில் புதிய ராணுவ தளபதியை நியமிப்பதில் தான் சுயமாக செயல்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, வரும் 29-ந்தேதி தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். தற்போது 61 வயதாகும் ஜாவேத் பாஜ்வாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை ராணுவ தளபதியாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் ஜாவேத் பாஜ்வா ஓய்வு பெறுவதற்கு தயாராகி வருவதாகவும், புதிய ராணுவ தளபதியை அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நியமிப்பார் என்றும் பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் புதிய ராணுவ தளபதியை நியமிப்பதில் தான் சுயமாக செயல்படுவதாகவும், இந்த விவகாரத்தில் எந்த அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.