சட்டை இல்லாமல் பார்க்க "கேவலமாக" இருப்பீர்கள் - ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்களுக்கு புதின் பதிலடி!

மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் புகைப்படம் வெளியாகியது.

Update: 2022-06-30 16:33 GMT

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியது.

ரஷிய அதிபர் புதின் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். அவர் பலமான மனிதர் என்பதை காட்டுவதற்காக அவருடைய இது போன்ற புகைப்படங்கள் ரஷிய அதிபர் மாளிகையால் அடிக்கடி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தை பார்த்த பின், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் புதினைப் பற்றி கேலி செய்தனர்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டுக்கு முன் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதினின் படத்தைப் பார்த்து அவர்கள் கேலி செய்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்ற தலைவர்களை நோக்கி, "நாம் அனைவரும் புதினை விட உறுதியானவர்கள் என்பதை காட்ட வேண்டும். அதற்காக நம்முடைய ஜாக்கெட்டுகளை அவிழ்க்க வேண்டுமா..?" என்று கேலியாக பேசினார்.

இந்த நிலையில், தன்னை கிண்டல் அடித்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மேற்கத்திய நாட்டு தலைவர்களை தான் சட்டை இல்லாமல் பார்க்க சகிக்காது என விளாடிமிர் புதின் விமர்சித்து இருக்கிறார்.

மேலும், நேட்டோவில் சுவீடன், பின்லாந்து ஆகியவை இணைவது குறித்து கவலை ஏதும் இல்லை. ராணுவப் படைகள் குவிக்கப்பட்டாலோ, அதற்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலோ தக்க பதிலடி கொடுக்கப்படும் என புதின்  எச்சரிக்கை விடுத்தார்.

ரஷியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் பகுதிகள் செயல்பட்டு வந்தால் அதே அளவிலான அச்சுறுத்தல்கள் அவர்கள் மீதும் செலுத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்