டைட்டன் நீர்மூழ்கியை தயாரித்த ஓஷன்கேட் நிறுவனத்தின் இணைய, சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்
ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
வாஷிங்டன்,
கடந்த 1912-ம் ஆண்டு வடக்கு அட்லாண்டிக் கடலில் பயணம் செய்து கொண்டிருந்த போது பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது கனடாவின் நியூபவுண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவிலுள்ள கடல்படுகையில் காணப்படுகிறது.
இதனைப் பாா்வையிடும் பொருட்டு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியாா் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீா்மூழ்கிக் கப்பல் கடந்த மாதம் 18-ந்தேதி பயணப்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 1.45 மணி நேரத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக நீா்மூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேசாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பிரித்தானிய தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாா்கியோலே ஆகியோரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நீர்மூழ்கியை தயாரிப்பதற்காக ஓஷேன்கேட் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் டைட்டன் நீர்மூழ்கியை தயாரித்த ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அதன் பேஸ்புக், இஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட இருந்த அனைத்து கடல் பயணங்களும் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் ஓஷன்கேட் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.