நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் - ஜோ பைடன்
இஸ்ரேல் மீது ஈரான் டிரோன் தாக்குதல் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
வாஷிங்டன்,
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் இந்த மாத தொடக்கத்தில் வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதிகள் 2 பேர் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் ஈரான் கடும் கோபமடைந்தது. இந்த தாக்குதலுக்காக இஸ்ரேலுக்கு எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரைத்தது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் நீடித்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈரான் நாட்டின் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்கள், நீண்ட தூர மற்றும் நடுத்தர ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஈரான் வீசியது.
எனினும் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. இதனால் உயிர் சேதம் போன்ற பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. இருந்த போதிலும் ஒரு சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பையும் கடந்து உள்ளே நுழைந்தன. அவை தெற்கு இஸ்ரேலில் உள்ள விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களை தாக்கின. இதில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உடனடியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கின. இஸ்ரேலை நோக்கி வீசப்பட்ட டிரோன்களை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் படைகள் இடைமறித்து அழித்தன.
இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் இஸ்ரேலின் மக்களையும், அங்குள்ள அமெரிக்க வீரர்களையும் அமெரிக்க இரும்பு கவசம் கொண்டு பாதுகாக்கும் என உறுதியளித்தார்.
மேலும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து விவாதிப்பதற்காக ஜி-7 நாடுகள் கூட்டத்துக்கு ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். அதன் பேரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் வலைதளத்தில், "இன்று, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் முன்னோடியில்லாத தாக்குதலைப் பற்றி விவாதிக்க எனது சக ஜி-7 தலைவர்களை நான் கூட்டினேன். பிராந்தியத்தில் நிலைமையை உறுதிப்படுத்தவும் மேலும் அதிகரிப்பதைத் தவிர்க்கவும் நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.