போப் பிரான்சிஸின் இந்திய வருகை 2025-ம் ஆண்டுக்கு பின்பு இருக்கும்: ஜேக்கப் கூவக்காடு

2020-ம் ஆண்டு முதல் போப் பிரான்சிஸின் சர்வதேச பயணங்களை நிர்வகிக்கும் பணியை ஜேக்கப் கூவக்காடு செய்து வருகிறார்.

Update: 2024-12-17 09:53 GMT

கொச்சி,

வாடிகன் நகரத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிகா எனப்படும் புகழ் பெற்ற கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 7-ந்தேதி கிறிஸ்தவ மத நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், உலகம் முழுவதிலும் இருந்து பாதிரியார்கள் மற்றும் முக்கிய நபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 21 பேர் புதிதாக பாதிரியார்களாக நியமிக்கப்பட்டனர்.

இதில், ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு (வயது 51) என்பவரும் ஒருவர் ஆவார். அவர், கேரளாவுக்கு இன்று வருகை தந்துள்ளார். கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக அனைவருக்கும் அவர், தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார். அவருக்காக வேண்டி கொண்ட, அவர் மீது அன்பு செலுத்திய மற்றும் ஆசி வழங்கிய ஒவ்வொருவரையும் நினைவுகூர்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸின் இந்திய வருகையை பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த கூவக்காடு, போப் பிரான்சிஸ் எப்போது இந்தியாவுக்கு வருவார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், 2025-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.

ரோம் நகரில் ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஜூபிளி ஆண்டுக்கான கொண்டாட்டங்கள் இந்த வருட இறுதியில் தொடங்க உள்ளன. அடுத்த ஆண்டு இறுதி வரை இந்த கொண்டாட்டம் இருக்கும்.

இந்த நிலையில், ஜேக்கப் கூவக்காடு கூறும்போது, ரோமில் நடைபெறும் கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்த வருடத்தில் அவர் ரோமில் இருப்பார். எனினும் வருங்காலத்தில், போப்பின் இந்திய வருகையை மறுக்க முடியாது. அவர் வருவார் என நம்புவோம். அதற்காக நாம் வேண்டி கொள்வோம் என கூறியுள்ளார்.

கேரளாவின் சங்கனாச்சேரி திருச்சபையை சேர்ந்தவரான பேராயர் கூவக்காடு, போப் பிரான்சிஸால் பாதிரியாராக நியமனம் செய்யப்பட்ட நிலையில், இந்திய பாதிரியார்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால், வாடிகன் நகரில் இந்திய பிரதிநிதித்துவம் வலுவடைந்துள்ளது. 2020-ம் ஆண்டு முதல் போப் பிரான்சிஸின் சர்வதேச பயணங்களை நிர்வகிக்கும் பணியை ஜேக்கப் கூவக்காடு செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்