'கிரிக்கெட் பற்றியும் விவாதித்தோம்'; ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு பற்றி மத்திய மந்திரி டுவிட்

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்ய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

Update: 2023-02-18 07:21 GMT


மெல்போர்ன்,


ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், அந்நாட்டு வெளியுறவு மந்திரி பென்னி வாங்கை அவர் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா கையெழுத்திட்ட பேட் ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கினார். இதற்கு பதிலாக, மத்திய மந்திரி ஜெய்சங்கர் பெயர் எழுதிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஒன்றை வாங் பரிசாக வழங்கினார்.

இந்த பயணத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நல்லுறவு பற்றி ஆலோசிக்கப்படுவதுடன், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் வளங்களுக்கான திறந்த நிலையிலான மற்றும் வெளிப்படை தன்மையுடன் கூடிய ஆழ்ந்த ஒருங்கிணைப்பு மற்றும் இருவரும் ஒன்றாக பங்காற்றுவது எப்படி? என்பது பற்றி இரு நாடுகளும் விவாதிக்க உள்ளன.

இந்த பேச்சுவார்த்தையின்போது, மந்திரிகள் மற்றும் உயர்மட்ட அரசு பிரதிநிதிகள், அவற்றுடன் தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தொடர்புடைய நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

பயணம் பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசை இன்று காலை கிர்ரிபில்லி ஹவுசில் சந்தித்து பேசினேன். பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்த்துகளை அவரிடம் தெரிவித்து கொண்டேன்.

இரு நாடுகளுக்கு இடையேயான செயல்திட்ட உறவு பற்றிய முழு ஆற்றலும் எங்களுடய விவாதத்தில் எதிரொலித்தது. சமீபத்திய வளர்ச்சி நிலை பற்றி பிரதமர் அந்தோணி குறிப்பிட்டார். இந்த விவாதத்தில், கிரிக்கெட் பற்றியும் விவாதித்தோம் என தனி குறிப்பாக மந்திரி ஜெய்சங்கர் குறிப்பிட்டு உள்ளார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி மந்திரி ஜெய்சங்கரிடம் கூறும்போது, உங்களுடைய பிரதமருடன் எண்ணற்ற சந்திப்புகளை முன்பே நடத்தி இருக்கிறேன். நம்முடைய பொருளாதார உறவு முக்கியத்துவம் வாய்ந்தது.

அதனை வலுப்படுத்துவதுடன், பாதுகாப்பு விவகாரங்களையும் கூட வலுப்படுத்த எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் என்று ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை இறுதி செய்வதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசு அடுத்த மாதம் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்