லைவ்: 11ம் நாளாக தொடரும் போர் - இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
போர் தொடங்கியது முதலில் இஸ்ரேலில் இதுவரை 55 போலீசார் பலி
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த 7ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், போர் தொடங்கியது முதல் இதுவரை இஸ்ரேல் போலீசார் 55 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 70 பேர் பலி
காசா முனையில் உள்ள கான் யூனிஸ், ரபா நகரங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
இரவு முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்:
காசா முனை மீது நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த வான்வழி தாக்குதலில் பலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 200-ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,400 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 266 ஆக அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் செல்லும் ஜோ பைடன்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நடக்கும் சூழலில் இஸ்ரேல் ஜோர்டானுக்கு ஜோ பைடன் செல்கிறார். ஹமாசின் போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த நாளை இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த ஐ.நா.வில் ரஷியா கொண்டு வந்த வரைவு தீர்மானம் நிராகரிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த ஐ.நா.வில் ரஷியா கொண்டு வந்த வரைவு தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்த வேண்டும், ஹமாஸ் பிடித்துவைத்துள்ள பணய கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்க வேண்டுமென வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ரஷியா கொண்டு வந்த இந்த வரைவு தீர்மானத்தில் ஹமாஸ் தாக்குதலை கண்டிக்கவில்லை என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இந்த வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற 9 வாக்குகள் தேவைப்படும் நிலையில் குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றதால் தீர்மானம் தோல்வியடைந்தது.
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் பலி
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தவர் ஒசாமா அல் மசினி. இவர் ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதிகளாக பிடித்துவரப்படுவர்களை கையாளுதல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், காசா முனை மீது இஸ்ரேல் நேற்று இரவு வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒசாமா அல் மசினி கொல்லப்பட்டார்.
11ம் நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 11வது நாளாக நடைபெற்று வருகிறது.
இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது - இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்
இஸ்ரேலுடனான தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், “கடந்த வார இறுதியில் இஸ்ரேலில் நடந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், கிட்டத்தட்ட 200 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். முதியவர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் கைக்குழந்தைகள் கொல்லப்பட்டனர், சிதைக்கப்பட்டனர் மற்றும் உயிருடன் எரிக்கப்பட்டனர். இது ஒரு படுகொலை... நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம். இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இங்கிலாந்து குடிமக்களுக்கு நாங்கள் உதவுகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் செல்ல திட்டம்..!!
காசா-எகிப்து இடையேயான ரபா எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவுக்குள் அனுப்புவதற்காகவும், போர் முனையில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதற்காகவும் 5 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால் இந்த செய்தியை இரு தரப்பும் மறுத்து உள்ளன. ‘காசாவில் அடுத்து வரும் சில மணி நேரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என எந்தவொரு தரப்பிலிருந்தும் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை’ என ஹமாஸ் செய்தி தொடர்பாளர் சலமா மாரூப் தெரிவித்தார்.
இதைப்போல எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என இஸ்ரேல் பிரதமர் அலுவலகமும் தெரிவித்தது.
காசா மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேல் செல்ல திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்காக அவர் தனது கொலராடோ பயணத்தை ஒத்திவைத்துள்ளார். எனினும் இஸ்ரேல் பயண திட்டம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இஸ்ரேல்-காசா இடையே நடந்த 5 போர்களிலும் மிகவும் கொடியதாக மாறியிருக்கும் இந்த போரின் போக்கு மேலும் விரிவடையும் அச்சம் நிலவுவதால் சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன.