வன்முறை ஒருபோதும் அரசியலின் அங்கமாக இருக்க முடியாது - இஸ்ரேல் வெளியுறவு மந்திரி
வன்முறை அரசியலின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூழலில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார்.
இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்புக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்டு டிரம்ப் மீதான தாக்குதலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அமெரிக்காவின் 45வது அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். வன்முறை ஒருபோதும் அரசியலின் அங்கமாக இருக்க முடியாது" என்று அதில் இஸ்ரேல் காட்ஸ் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் காசாவை தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்கி நிர்மூலமாக்கி வருகிறது. இதில் பாலஸ்தீனியர்கள் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.