பதவியேற்று ஒரு ஆண்டு ஆன நிலையில் வியட்நாம் அதிபர் ராஜினாமா

கடந்த ஆண்டு வியட்நாம் அதிபராக பதவியேற்ற வோ வான் துவாங், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2024-03-20 12:35 GMT

Image Courtesy : AFP

ஹனோய்,

வியட்நாம் நாட்டின் அதிபராக 54 வயதான வோ வான் துவாங், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் பதவியேற்றார். அவருக்கு முன்பு பதவியில் இருந்த குயென் சுவான் புக், கொரோனா காலகட்டத்தில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாக பொறுப்பேற்று பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்குப் பிறகு வோ வான் துவாங் வியட்நாம் அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே வியட்நாம் நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் வோ வான் துவாங் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தை வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளது. வோ வான் துவாங் தனது சொந்த காரணங்களுக்காக அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என அந்நாட்டின் அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்