பாலஸ்தீன பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் டிரைவரின் காருக்கு தீவைப்பு.. உள்ளூர் மக்கள் ஆவேசம்: வீடியோ

ஒரு வீடியோவில், இஸ்ரேலியரின் காரை பாலஸ்தீனர்கள் கற்களை வீசி தாக்குவதும், அடுத்த வீடியோவில் கார் தீப்பற்றி எரிவதும் பதிவாகி உள்ளது.

Update: 2024-06-30 10:39 GMT

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரையில் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், ஆயுதமேந்திய பாலஸ்தீனர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் மற்றும் வன்முறை ஏற்படுகிறது. தற்போது, இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்குமிடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்த வன்முறை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தும்போது அவர்களுக்கும் உள்ளூர் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உயிர்ப்பலி அதிகரித்து வருகிறது.

இஸ்ரேல் படைகள் மற்றும் மேற்கு கரையில் குடியேறியவர்களால் குறைந்தபட்சம் 553 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதேபோல் பாலஸ்தீனியர்களின் தாக்குதல்களில் குறைந்தது 15 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலைச் சேர்ந்த டிரைவர் ஒருவர், ஜெருசலேம் மற்றும் ரமல்லா இடையே பாலஸ்தீன கட்டுப்பாட்டில் உள்ள குவாலந்தியா நகருக்குள் தவறுதலாக நுழைந்துள்ளார். இஸ்ரேல் பதிவெண் கொண்ட வாகனத்தைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த காரை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரு வீடியோவில், இஸ்ரேலியரின் காரை பாலஸ்தீனர்கள் துரத்தி துரத்தி கற்களை வீசி தாக்குவதும், அடுத்த வீடியோவில் கார் தீப்பற்றி எரிவதும் பதிவாகி உள்ளது.

பாலஸ்தீனர்களின் தாக்குதலில் இருந்து இஸ்ரேல் டிரைவர் தப்பிச் செல்ல முயன்றபோது, ராணுவ சோதனைச்சாவடி அருகே சாலையின் மையப்பகுதியில் உள்ள கான்கிரீட் தடுப்பில் கார் மோதி விபத்துக்குள்ளானதாகவும், இதில் காயமடைந்த டிரைவர் ஜெருசலேமில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் இஸ்ரேல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்