சீனாவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா

மத்திய கிழக்கு நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுக்கு ஒரு தெளிவு இல்லை என்றே கூறப்படுகிறது.

Update: 2022-07-17 14:00 GMT

ரியாத்,

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கா விலகி செல்லாது. மத்திய கிழக்கில் வெற்றிடத்தை உருவாக்கவும் அந்த வெற்றிடத்தை சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் நிரப்பவும் அமெரிக்கா விடாது' என்றார்.

ஆனால், மத்திய கிழக்கு நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவுக்கு ஒரு தெளிவு இல்லை என்றே கூறப்படுகிறது.

ஒருபுறம் சீனாவை எதிர்கொள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா இப்போது எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரானை கோபப்படுத்தியுள்ளது. மேலும், ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

அந்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்காவால் முடியவில்லை என்றே கூறப்படுகிறது. சவூதி அரேபியாவுடனான தனது உறவை மறுதொடக்கம் செய்வதற்கும், சீனாவின் பணம், செல்வாக்கு மற்றும் முக்கியமான இராணுவ வலிமையைப் பிராந்தியத்தில் பரவுவதை நிறுத்துவதற்கும் அமெரிக்காவிடம் எந்த மூலோபாயமும் இல்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. ஒபாமா முதல் பைடன் வரையிலான ஆட்சியில், சீனாவை சரியாக எதிர்கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அமெரிக்காவின் ஒட்டுமொத்த வீழ்ச்சியின் மற்றொரு அடையாளமாக சீனா பார்க்கிறது, இதன் மூலம் சீனா கோலோச்ச நினைக்கிறது.

சீனா ஏற்கனவே சவூதியின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோராக உள்ளது. சீன இராணுவம் ஏற்கனவே ஜிபூட்டியில் ஒரு கடற்படைத் தளத்தைக் கொண்டுள்ளது. எண்ணெய் விநியோகம் தடையின்றி இருப்பதை உறுதிசெய்ய அப்பகுதியில் ராணுவத்தை வைக்க விரும்புகிறது. சவூதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா விலகிய நிலையில், சீனா தெளிவாக அங்கு நகர்ந்துள்ளது.

ஈரான் அணுசக்தி திட்டத்திற்காக, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியதால், சவுதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவு பாதிக்கப்பட்டது. இருப்பினும், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தடைகளை விதித்தார். இப்போது இந்த விஷயத்தில் ஈரானுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கை எல்லாம் குழப்பமாக உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது. இவை அனைத்தும் சவுதியுடனான உறவுகளை இயல்பாக்குவதை நோக்கி அமெரிக்கா செல்வது போல் தோன்றலாம்.ஆனால் இது ஒரு நீண்ட பாதை.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணம் சவுதியுடனான உறவை சீர்படுத்த வேண்டும் என்பதற்காக அமைந்துள்ளது.

அமெரிக்காவால் கைவிடப்பட்டதாவே சவூதி உணர்கிறது.

முதலில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது அமெரிக்கா, பின் அணு ஆயுதம் தயாரிக்க ஈரானுக்கு அதிகாரம் அளித்தது.இப்படி செயல்பட்டு ,அமெரிக்காவின் நம்பகத்தன்மையை பைடன் அடித்து நொறுக்கியுள்ளார்.

ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான்பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி அளித்துள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை அதிகரிக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மத்திய கிழக்கு நாடுகளின் பயணத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்