அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உயர்வு... இந்திய ரூபாயின் மதிப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இருந்து அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு முதலீடுகள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்,
ரஷியா-உக்ரைன் போர் மற்றும் அதீத பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றின் விளைவாக அமெரிக்காவில் விலைவாசி உயர்வு கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை பூஜ்யத்தில் இருந்து ஒரு சதவீதமாக கடந்த 2 மாதங்களில் உயர்த்தியது. இந்த நிலையில் அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று வட்டி விகிதத்தை மீண்டும் 0.75 சதவீதத்திற்கு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்த மாதம் மேலும் 0.75 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் அறிவித்துள்ளார். இதன் விளைவாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இருந்து அமெரிக்க கடன் பத்திரங்களுக்கு முதலீடுகள் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து தங்கம் விலை வீழ்ச்சியடையும் என்றும் கருதப்படுகிறது.