ஜப்பான் சென்றடைந்த அமெரிக்க அதிபர் பைடன்; ராணுவ வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்

ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பானுக்கு சென்றடைந்த அமெரிக்க அதிபர் பைடன், அந்நாட்டு பிரதமர் கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2023-05-18 15:09 GMT

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், உறுப்பு நாடுகள் கலந்து கொள்கின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு இன்று சென்றடைந்து உள்ளார் என வெள்ளை மாளிகை வெளியிட்ட குறிப்பு தெரிவிக்கின்றது.

அவருக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், ஜப்பான் ராணுவ வீரர், வீராங்கனைகளுடன் அவர் ஒன்றாக செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த பயணத்தில் உக்ரைனுடனான ரஷியாவின் போர், அணு ஆயுதம் பயன்பாட்டை குறைப்பது, செயற்கை தொழில் நுட்பம், பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

இதேபோன்று அதிகரித்து வரும் சீனாவின் அதிகாரம் மற்றும் செல்வாக்கு ஆகியவை பற்றியும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. 3 நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் அதிபர் பைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 7 நாடுகளும், ரஷியாவுக்கு எதிராக புதிய தடைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன், சீனாவை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் ஆன்லைன் வழியே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொள்ள இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்