காசாவில் உடனடி போர்நிறுத்தம்.. தீர்மானம் கொண்டு வர அமெரிக்கா திட்டம்

பஞ்சம் தலைவிரித்தாடும் காசா பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கு போர்நிறுத்தம் வழி வகுக்கும்.

Update: 2024-03-22 07:08 GMT

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளதால் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அங்குள்ள அப்பாவி மக்கள் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். உதவிப்பொருட்கள் சரிவர சென்று சேராததால் மக்கள் பசி பட்டினியால் வாடுகின்றனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் கூறி வருகிறது.

இது ஒருபுறமிருக்க சண்டையை நிறுத்துவதற்கு அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. 6 வார கால போர்நிறுத்தத்தை மையப்படுத்தி கத்தாரில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக இஸ்ரேலிய உளவுத்துறை தலைவர் கத்தார் செல்ல உள்ளார்.

போர் நிறுத்த காலத்தில் ஹமாஸ் பிடியில் இருந்து இஸ்ரேல் பிணைக் கைதிகள் 40 பேரை விடுவிக்கவும், அதற்கு பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களை விடுதலை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், கடுமையான உணவு பற்றாக்குறையால் பஞ்சம் தலைவிரித்தாடும் பகுதிக்குள் கூடுதல் உதவிப்பொருட்களை அனுப்புவதற்கும் இந்த போர்நிறுத்தம் வழி வகுக்கும்.

இதற்கிடையே, காசாவில் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்து, இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

பேச்சுவார்த்தையில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்