ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கும் தனிநபர்கள், பிற அமைப்புகள் மீது அமெரிக்கா புதிய தடை

பயங்கரவாதிகளின் நிதி வழிகளை தகர்க்க நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

Update: 2023-11-14 17:19 GMT

வாஷிங்டன்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். பலர் படுகாயமடைந்து உள்ளனர்.

பணய கைதிகளாக சிறை பிடித்து கொண்டு செல்லப்பட்ட 240 பேரை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது.

தொடர்ந்து தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. சுரங்க பகுதிகளை தாக்கவும் திட்டமிட்டு முன்னேறி வருகிறது. வடக்கு காசா பகுதியில் அமைந்த பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால், அந்த மருத்துவமனையில் மருத்துவ சேவை வழங்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

7 குழந்தைகள் மற்றும் 27 நோயாளிகள் வரை உயிரிழந்து விட்டனர் என ஹமாஸ் அமைப்புக்கான துணை சுகாதார மந்திரி யூசுப் அபு ரிஷ் கூறியுள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி கேலன்ட் விடுத்துள்ள வீடியோ செய்தியொன்றில், காசாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இழந்து விட்டது. பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி தப்பியோடுகின்றனர்.

ஹமாஸ் அமைப்பின் மையங்களை பொதுமக்கள் சூறையாடி வருகின்றனர் என கூறினார். எனினும், அதற்கான சான்று எதனையும் அவர் வெளியிடவில்லை.

இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, அதன் ஒரு பகுதியாக ஹமாஸ், பிற பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது புதிய தடைகளை விதித்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது, இங்கிலாந்துடன் ஒருங்கிணைந்து அமெரிக்கா புதிய தடைகளை விதிக்கிறது.

பயங்கரவாதிகளின் இந்த நிதி வழிகளை தகர்ப்பதற்காக எங்களுடைய நட்பு மற்றும் கூட்டணியில் உள்ள நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படுவோம் என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்