இலங்கை 75-வது சுதந்திர தின விழாவில் மத்திய மந்திரி முரளீதரன் பங்கேற்பு
இலங்கை சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொள்கிறார்.
கொழும்பு,
ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ந் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் இன்று நடக்கின்றன.
அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொள்கிறார். இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று இலங்கை சென்றார். சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதுடன், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மேலும், இந்திய வம்சாவளியினரையும் முரளீதரன் சந்திக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்று வந்த 2 வாரத்தில் முரளீதரன் அங்கு சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.